சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட உயிரினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பினருடன் நரிக்குறவர் சமூகத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேச சிட்டுக்குருவி தினத்தையொட்டி அழியும் நிலையில் உள்ள சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவையினங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பறவைகள் இன ஆர்வலர்கள் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
நகரமயமாவதன் காரணமாகச் சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இனங்களின் வாழ்வியல் கேள்விக்குறியானதால் அதன் இனங்கள் அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது. அதனை மீட்டெடுத்துப் பாதுகாக்கும் வகையில் சிட்டுக்குருவி, ஆந்தைகள், மைனாக்கள், அணில் உள்ளிட்ட பல்லுயிர்கள் தங்கவும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கவும் சாதகமான கூடுகளைத் தயாரித்து நகர் முழுவதும் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பறவைகளை வேட்டையாடி வந்த நரிக்குறவர் சமூகத்தினரையும் இந்த பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். அவர்களும் பறவையினங்கள் தங்குவதற்கு ஏற்றவாறு கூடுகளைத் தயாரித்து பறவையின ஆர்வலர்கள், பல்வேறு பண்ணைகள், மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு புதிய பாதையில் பயணிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக நரிக்குறவர் சமூகத்தினர் மகிழ்ச்சியாகத் தெரிவித்தனர்.