தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் அமைச்சர் பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் தான் அவர் லோக்சபா தேர்தல் பிரச்சார நேரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆன அவர், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டியில் முதல்வர் ஸ்டாலினின் திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி மரணமடைந்தார்.
திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்தத் தொகுதிக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் அதாவது அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். வரும் ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 14 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். ஜூன் 21 ஆம் தேதி தாக்கல் செய்ய இறுதி நாள். ஜூன் 24 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 கடைசி நாள். ஜூலை 10 ஆம் தேதி வாக்குப்பதி நடைபெறும், ஜூலை 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.