• Fri. Apr 19th, 2024

முதல்வர் ஸ்டாலினுக்கு..விஜயகாந்த் வைத்த அதிரடி கோரிக்கை..!

Byமதி

Dec 1, 2021

வடமேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, சென்னை நகரமெங்கும் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றக் கோரியும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேமுதிக தலைவர் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,


வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது. மேலும் மழை வெள்ளத்தால் சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். தற்போது மழை சிறிது ஓய்ந்திருக்கும் நிலையில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் இன்னும் வராததால் சென்னை மாநகரம் தீவு போல் காட்சியளிக்கிறது.


இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், தேங்கியிருக்கும் மழைநீரால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஆறாக ஓடுவதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்களும் வேகமாக பரவி வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழக முதல்வர் ஆய்வு செய்தால் மட்டும் போதாது மழைநீரை அகற்ற அதிகார பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் காலம் தாழ்த்தாமல் சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத குழாய்கள் மூலம் அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மழைநீரில் பயிர்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு, தமிழக அரசு உரிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி போல மெயின்ரோட்டில் மெட்ரோ ரயிலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தாலும், தெருக்களில் மழைநீர் தேங்கி சாலைகள் சேதம் அடைந்துள்ளதால், சென்னை மக்கள் சாலைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலைகளை சீரமைக்கவும் மழை நீரை வெளியேற்றவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *