• Sun. Feb 9th, 2025

கோவையில் வானதி சீனிவாசன் MLA விமர்சனம்!

BySeenu

Jan 23, 2025

இந்த ஆட்சியில் இளவரசருக்கு பட்டம் சூட்டுவதில் இருக்கும் கவனம் மக்களைப் பற்றி இருப்பதில்லை என வானதி சீனிவாசன் விமர்சனம் செய்கிறார்.

கோவை ரத்தினபுரி ஹட்கோ காலனி பகுதியில் சங்கனூர் ஓடையில் தூர்வாரும் பணிகள் மேற்கொண்டு வந்த பொழுது நேற்று முன் தினம் இரவு ஒரு மாடி வீடும் அதன் அருகில் இருந்த இரண்டு ஓட்டு வீடுகளும் சரிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சம்பவ இடத்தில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், சங்கனூர் பள்ளத்தில் ஓடையை பலப்படுத்துவதற்காக கான்கிரீட் சுவர் எழுப்பும் பணிகளை செய்து வந்த போது பாதுகாப்பின்றியும் மக்களை அப்புறப்படுத்தாமலும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டார். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் வீடுகளை இழந்த மூன்று குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கி இருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த தகவலும் தங்களுக்கு வரவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிப்பதாக கூறினார்.

மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட அனைவருக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை வைப்பதாகவும் அதுமட்டுமின்றி தங்களால் இயன்ற உதவிகளையும் செய்வோம் என தெரிவித்தார்.

தற்பொழுது வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரியாமல் இருந்தால் அரசு எந்த அளவுக்கு அலட்சியமாக இருக்கிறது என்று தான் நாம் கேள்வி எழுப்ப வேண்டி உள்ளது என்றும் தற்போது வரை எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்றால் அரசுக்கு இதை தவிர வேறு என்ன வேலை உள்ளது? எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் மக்களுக்கு உதவாமல் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும், இங்கு மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் அடிப்படை வசதிகள் பற்றிய புகார்களை அளிப்பதற்கு கூட மக்கள் எம்எல்ஏ அலுவலகத்திற்கு தான் வருகிறார்கள் என தெரிவித்தார். கோவையில் ஆற்று படுகைகளில் ஏழை மக்கள் தான் வசித்து வருவதாகவும் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கலாம் ஆனால் அதற்கான முயற்சிகளை அரசு முன்னெடுப்பதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இந்த ஆட்சி ஆரம்பித்ததில் இருந்தே இளவரசருக்கு பட்டம் சூட்டுவதிலும், மந்திரிகளை பாதுகாப்பதிலும் தான் கவனம் செலுத்தி இருக்கிறார்களே தவிர ஏழை, எளிய மக்களை பற்றி கவலைப்படுவதில்லை என விமர்சித்தார்.