• Wed. Apr 24th, 2024

உத்தரகண்ட் தொப்பி, மணிப்பூர் துண்டு: இதற்கு முன்?

விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் உத்தரகண்ட் மாநில பாரம்பரிய தொப்பியுடன், மணிப்பூர் மாநில துண்டை அணிந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 73வது குடியரசு நாள் விழாவில் பங்கேற்றார்.

வழக்கமாக, குடியரசு நாள் விழாவில் பங்கேற்கும் போது மிக அழகிய தலைப்பாகையை பிரதமர் மோடி அணிவது வழக்கம். ஆனால், இந்த முறை அவர் உத்தரகண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியை அணிந்து வந்தார்.

குடியரசு நாள் விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியை அணிந்திருந்தார். அதில், அந்த மாநிலத்தின் மாநில மலரான பிரம்மக்கமலம் பொறிக்கப்பட்டிருந்தது.

அதோடு, மணிப்பூர் மாநில பாரம்பரிய துண்டினையும் பிரதமர் மோடி அணிந்திருந்தது பலரது கவனத்தையும் பெற்றது.இன்னும் ஒரு சில வாரங்களில் உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இவை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், வழக்கமாக பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் சென்று கோயிலில் வழிபாடு செய்யும்போது, பிரம்மக்கமல மலரை பயன்படுத்துவார் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தலைப்பாகை… வழக்கமாக சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் நிகழ்வுகளில் உரையாற்றும் பிரதமர் மோடியின் தலைப்பாகை நிச்சயம் தனிக்கவனம் பெறுவது வழக்கம். அது பற்றி தனியே ஒரு பெட்டிச்செய்தியாவது வெளியாகிவிடும்.
கடந்த ஆண்டு கூட நாட்டின் 72வது குடியரசு நாள் நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு தலைப்பாகையை அணிந்திருந்தார்.

நாட்டின் புகழ்பெற்ற ஒரு பேரரசின் வரலாறு இந்த தலைப்பாகையின் பின்னணியில் இருப்பது பலரும் அறிந்திராத தகவல். இரண்டாம் உலகப் போரின் போது போலந்திலிருந்து நூற்றுக்கணக்கான சிறுமிகளை, அழைத்து வந்து மறுவாழ்வு அளித்த ஜாம் சாஹேப் திக்விஜய் சிங்ஜியின் குடும்பத்தால் பரிசளிக்கப்பட்ட தலைப்பாகைதான் அன்று மோடி அணிந்திருந்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர நாள் விழாவின்போது, சிவப்பு கலந்து காவி நிற தலைப்பாகை அதிக கவனம் பெற்றது. பிரதமராகப் பொறுப்பேற்று 2014ஆம் ஆண்டு நடந்த சுதந்திர நாள் விழாவில், ஜோத்புரி பந்தேஜ் வகையான தலைப்பாகையை மோடி அணிந்திருந்தார். பச்சை நிறத்தில் தோகைக் கொண்டு அமைந்திருந்தது அந்தத்தலைப்பாகை.

2015ஆம் ஆண்டு, பல வண்ண கோடுகள் கொண்ட மஞ்சள் நிற தலைப்பாகையை அணிந்திருந்தார். இதுவும் அப்போது அதிக நபர்களால் கவனம் பெற்றது.
தற்போது, மணிப்பூர் மற்றும் உத்தரகண்டில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தலைப்பாகைக் கலாசாரத்தை மாற்றி, உத்தரகண்டின் பாரம்பரிய தொப்பியையும், மணிப்பூரின் துண்டையும் அணிந்திருந்தார் பிரதமர் மோடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *