அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதால் நோய்கள் பெருகும் அபாயம் இருப்பதாக
- மருத்துவப் பல்கலை., முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் எச்சரிக்கை
அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பல நோய்கள் வருவதாக டாக்டர் சுதா சேஷய்யன் கவலை தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே.., பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டவர் இவ்வாறு பேசினார். கல்லூரியில் நர்சிங் முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா அடையாறு டி.என்.ராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்றது. இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் எஸ்.வி.வீரமணி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை., முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். நர்சிங் கல்லூரி சேர்மன் பேராசிரியர் கே.ஆர்.ஆறுமுகம், துணை சேர்மன் டாக்டர்.எ.பாபு தண்டபாணி ஆகியோர் வரவேற்றனர்.
மாணவர்களுக்குப் பட்டம் வழங்கிய பின் டாக்டர் சுதா சேஷையன் பேசியதாவது; “மருந்தியல் மற்றும் மருந்தாக்கியல் துறைகள் இந்தியாவில் வெகு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. மருத்துவத்துறை வளர வளர மருந்துகளின் தேவை அதிகமாக இருப்பதால் இத்துறையும் விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. பல நோய்களுக்கும் புதுப்புது மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. மருத்துவம் படித்து சேவை செய்ய விரும்பும் மாணவர்கள் இந்த படிப்புகளை படிக்க வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மருத்துவம் தொடர்பான இந்த படிப்புகளில் சேர்க்க வேண்டும். மருத்துவத்துறையில் மாணவர்களுக்கு எப்போதும் எதிர்காலம் உண்டு” என்றார்.
மேலும், “நுகர்வு கலாச்சாரம் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகள் அன்றாட உணவுகளில் இடம் பிடித்து விட்டன. மேலும், அழகு சாதன பொருட்களை எல்லோரும் பயன்படுத்த தொடங்கி விட்டோம். 30-40 ஆண்டுகளுக்கு முன்பு இவற்றின் பயன்பாடு பெரிதாக இல்லை. இவற்றைப் பயன்படுத்துவது பல நோய்களுக்கு வழிவகுக்கும். இவற்றை குறைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.