மாநில அளவிலான கைத்தறி நெசவாளர் போட்டியில் பங்கேற்று சிறந்த நெசவாளர்களுக்கான விருதை பரமக்குடி நெசவாளர்கள் பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமையைத் தேடித் தந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள எமனேஸ்வரம் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் ஜந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நெசவுத் தொழில் செய்து வருகின்றனர். கைத்தறி கூட்டுறவு சங்கம் சார்பில் 2022-ம் ஆண்டுக்கான மாநில அளவில் பருத்தி நெசவு தொழிலில் சிறந்த நெசவாளர்களுக்கான போட்டியானது நடைபெற்றது.
இதில் பரமக்குடி பகுதியில் உள்ள நெசவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை பரமக்குடியை சேர்ந்த நெசவாளகள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் இப்போட்டியில் முதல் பரிசு வென்ற சரவணன் ராமாயணத்தில் ராமர், பத்து தலை கொண்ட ராவணனை வதம் செய்யும் காட்சியை தத்ரூபமாக பல வண்ணங்களில் வடிவமைத்துள்ளார். இதற்காக ரூ. 5 லட்சமும், இரண்டாம் பரிசு வென்ற நாகராஜன் இயற்கை காட்சியை வடிவமைத்திருந்தார். அவருக்கு ரூ.3 லட்சம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதைதொடர்ந்து, பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த நெசவாளர்கள் முதல் மற்றும் இரண்டாம் பரிசை வென்று முதலமைச்சரிடம் பரிசு பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்ததற்கு நெசவாளர்கள் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர்.