நேற்று முன்தினம் இரவில் அடுத்தடுத்து தாக்கிய அதிபயங்கர சூறாவளியாழ் அமெரிக்காவின் 6 மாகாணங்களை முற்றிலுமாக உருக்குலைத்து விட்டன.
கென்டக்கி, இல்லினாய்ஸ், டென்னிசி, ஆர்கன்சாஸ், மிசூரி மற்றும் மிசிசிப்பி ஆகிய 6 மாகாணங்களை வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலைக்குள் 30-க்கும் மேற்பட்ட சூறாவளிகள் தாக்கின. இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது கென்டக்கி மாகாணம். அங்கு மணிக்கு 361 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது.
இந்த சூறாவளி காற்றில் மெழுகுவர்த்தி தொழிற்சாலை ஒன்று இடிந்து விழுந்தது, பெரும் உயிர் சேதத்துக்கு காரணமானது. கென்டக்கி மாகாணத்தில் மட்டும் இதுவரை 70 பேர் சூறாவளியால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே போல் இல்லினாய்ஸ் மாகாணத்தில் அமேசான் நிறுவனத்தின் கிடங்கு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர். இதுதவிர டென்னிசி மாகாணத்தில் 4 பேர், ஆர்கன்சாஸ் மற்றும் மிசூரி மாகாணங்களில் தலா 2 பேர் சூறவாளிக்கு பலியாகினர். இதன் மூலம் ஒரே இரவில் அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட அதிபயங்கர சூறாவளிகளுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி தாக்கி இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளின் இன்னும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார். மேலும் சூறாவளியால் மோசமாக பாதிக்கப்பட்ட கென்டக்கி மாகாணத்தில் அவர் தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.