

அமெரிக்க ராணுவத்தின் தலைவரான சிகியூ பிரவுனை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டிஸ்மிஸ் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.குறிப்பாக அமெரிக்கா முழுவதும் தங்கி உள்ள சட்டவிரோத அகதிகளை வெளியேற்ற டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் அத்துமீறி. அனுமதியின்றி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவதற்கும், புதிதாக மக்கள் ஊடுருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். கை, கால்களில் விலங்கிட்டு இந்தியர்களை ட்ரம்ப் வெளியேற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமெரிக்க ராணுவத்தின் தலைவரான சிகியூ பிரவுனை அதிரடியாக பதவியில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் நீக்கியுள்ளார். அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனில் கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான விமானப்படை ஜெனரல் சிகியூ பிரவுனை பதவி நீக்கம் செய்து விட்டு
விமானப்படை லெப்டினன்ட் ஜெனரல் டான் ரஸின் கெய்னை கூட்டுப்படைத் தலைவர் பதவிக்கு ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார். இதற்கு செனட் ஒப்புதல் நிலுவையில் உள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட சிகியூ பிரவுனின் 40 ஆண்டுகளுக்கும் மேலான அவரது சேவைக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பிரவுனின் நீக்கம் பென்டகனில் பிரச்சினைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பான அமெரிக்க ராணுவத்திற்கான நடவடிக்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் சிகியூ பிரவுன் . அத்துடன் இப்பதவியில் இருந்து இரண்டாவது கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

