• Fri. Mar 29th, 2024

திருவிழாக்களில் விபத்தினை தடுக்க உபி.பாஜக அரசு பாணியை கையாளவேண்டும் -வைகோ வலியுறுத்தல்

ByA.Tamilselvan

Apr 27, 2022

விபத்துகள் ஏற்படுத்துவதைத் தடுக்க தமிழக திருவிழாக்களில் பங்கேற்பாளர்களுக்கு உச்சவரம்பு வரையறை ஒன்றை வகுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ வலியுறுத்தி உள்ளார்.
வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில் தஞ்சாவூர் அருகில் களிமேடு அப்பர்சாமி திருமடத்தின் தேர்த் திருவிழாவில், மின்சாரம் பாய்ந்து, 12 பேர் இறந்தனர். 15 பேர் படுகாயம்; அவர்களுள் 4 பேரின் நிலைமை கவலைக்கு இடமாக இருப்பதாக வந்திருக்கின்ற செய்திகள், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்துகின்றது.
தேர் வந்த வழியில் புதிய சாலை அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதனால், சாலை சற்றே உயர்ந்து இருப்பதையும், தேரின் உயரம், மின் கம்பங்களின் உயரத்தையும் சரியாகக் கணிக்கத் தவறி விட்டனர். தேர்ச்சக்கரங்கள் உருளுவதற்கு ஏதுவாக தண்ணீர் ஊற்றி இருக்கின்றார்கள். ஒரு இடத்தில் சற்றே தேங்கி நின்ற தண்ணீரில் சக்கரங்கள் நழுவி, மின் கம்பத்தின் மீது சாய்ந்தது, ஜென் செட் வெடித்துச் சிதறியதால், இந்த அளவிற்கு கடுமையான விபத்து நிகழ்ந்து இருப்பதாகத் தெரிகின்றது.
அண்மையில் மதுரையில் நடைபெற்று முடிந்த கள்ளழகர் திருவிழாவில் ஏற்பட்டநெரிசலில் இரண்டு பேர் இறந்தார்கள்,.தேர்த்திருவிழாவில், பல்லாயிரக்கணக்கானவர்கள்நெருக்கியடித்துக் கொண்டு, வடம் பிடித்து இழுத்துச் சென்றதைப் பார்த்தபோது, அதிர்ச்சியாக இருந்தது. அந்த இடத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
ஏற்கனவே பல ஊர்களில் தேர்கள் சரிந்து பலர் இறந்திருக்கின்றார்கள், பலர் உடல் உறுப்புகளை இழந்து இருக்கின்றார்கள்.எனவே, இன்றைய நிகழ்வை ஒரு பாடமாகக் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற கேடுகள் நேராத வண்ணம், தமிழக அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
. தாஜ்மகாலைப் பார்க்க, ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் பேர் வரையிலும் வந்து கொண்டு இருந்தார்கள். எனவே, உத்தரப் பிரதேச அரசு, இணைய வழி முன்பதிவை அறிமுகம் செய்து, ஒரு நாளைக்கு 40000 பேர்தான்பார்க்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதுபோல, காலத்திற்கு ஏற்ப, ஒரு இடத்தில் இவ்வளவு பேர்தான் கூடலாம் என்பதைக் கணக்கிட்டு, திருவிழாக்களில் பங்கேற்பவர்களுக்கு உச்சவரம்பு வரையறை வகுக்க வேண்டும்.
எனக் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *