கோவையில் கொடநாடு வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் சஜீவனிடம் இரண்டாவது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காலை 11 மணிக்கு இந்த விசாரணை துவங்கியது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தி வருகின்றனர். சென்னையில் சசிகலாவிடம் இருதினங்கள் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு கோவை திரும்பிய தனிப்படை போலீசார்அதிமுக வர்த்தக அணியைச் சேர்ந்த சஜீவனிடம் நேற்று விசாரணை நடத்தினர்.
நேற்று காலை 11 முதல் மாலை 6 மணி வரை சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் விசாரணை நடைபெற்று வருகின்றது. காலை 11 மணி அளவில் அதிமுக பிரமுகர் சஜீவன் விசாரணை நடைபெறும் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு வந்தார். இரண்டாவது நாளாக சஜீவனிடம் விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.
கொடநாடு பங்களாவில் உட்புற வடிவமைப்பு பணிகளை அனைத்தும் செய்து கொடுத்தவர் சஜீவன். ஜெயலலிதா உயிருடன் இருந்தபொழுது அவருடைய ரசனைக்கு ஏற்ப கொடநாடு பங்களாவில் உட்புற அலங்கார வேலைப்பாடு பணிகளை செய்து கொடுத்ததால் அதிமுக தலைமைக்கு நெருக்கமாக இருந்தார்.
ஜெயலலிதா ,சசிகலா ஆகியோரைத் தவிர வீட்டில் எந்தெந்த இடத்தில் என்னென்ன பொருட்கள், மரச்சாமான்கள் இருக்கிறது என்பதை மிக துல்லியமாக தெரிந்த நபர் சஜீவின் மட்டுமே.கொடநாடு கொலை , கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை சஜீவனின் சகோதரர் சுனில் காவல் துறையிடம் பேசி விடுவித்ததாக கூறப்படும் நிலையில் , தற்போது சஜீவன் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.எடப்பாடி பழனிச்சாமியின் குடும்பத்தினருடன் சஜீவன் நெருக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. ஏற்கனவே கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி ,அவரது மகன் அசோக் ,தம்பி மகன் பாலாஜி மற்றும் உதவியாளர் ஆகியோரிடமும், அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளர் அனுபவ் ரவியிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில் தற்போது சஜீவன் தனிப்படை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இரண்டாவது நாளாக விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.