தாம்பரம் மாநகராட்சியின் மேற்கு தாம்பரம் பகுதிக்குட்பட்ட பல்வேறு வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதி பணிகளை பகுதி திமுக கழக செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான D. காமராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

முதற்கட்டமாக, மேற்கு தாம்பரம் பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் விநியோக பணிகளை ஆய்வு செய்த அவர், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சீரான முறையில் குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி 49வது வட்டத்தில் சர்வீஸ் சாலையின் மேம்பாலம் கீழ் உள்ள பகுதியை சுத்தப்படுத்தி பூங்கா அமைக்க வேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையின் பேரில், அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். பூங்கா அமைப்பதற்கான சாத்தியமான இடங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், 54வது வட்டம் சாய்நகர் 5வது தெருவில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் விளையாட்டு திடல் பணிகளையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் S.G கருணாகரன், நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும், 54வது வட்டத்தில் உள்ள ஹரிதா என்க்ளேவ் பகுதியில் நடைபெற்று வரும் கால்வாய் அமைக்கும் பணிகளையும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும் விரைவாகவும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இறுதியாக, 56வது வட்டத்தில் உள்ள பொன்னியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் குளம் சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் 56வது வட்ட செயலாளர் S. ஐசக், D.K கோட்டி, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

தாம்பரம் மாநகராட்சியில் குடிநீர் வசதி, விளையாட்டு திடல், கால்வாய் மற்றும் பூங்கா உள்ளிட்ட மக்கள் நலப் பணிகள் விரைவாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.




