கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சூழலில், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் தை அமாவாசையான இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று குவிந்தனர்.
இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். அதில் 25 பேரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று காவல் துறை டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், காயமடைந்த 60 பேரில், 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
இந்த நிலையில் லக்னோவில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பிரயாக்ராஜில் 9 கோடி பேர் குவிந்துள்ளனர். கங்கை நதிக்கரையில் அகாரா மார்க்கில் உள்ள தடுப்புகளைச் சில பக்தர்கள் தாண்டிச் சென்ற போது, இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அகாரா பரிஷத் தலைவர்களிடம் பேசி, நெரிசல் குறைந்த பின்னர் நீராட அனுமதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களது முதல் பணி.
நெரிசலை தவிர்க்க பக்தர்கள் அருகில் உள்ள கங்கை நதிக்கரையில் நீராட வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சூழலில், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது” என்று அவர் கூறினார்.
மேலும் அவரது சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகா கும்பமேளா நிகழ்ச்சி யில் பங்கேற்க பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வாருங்கள். நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே உள்ள கங்கை படித்துறையில் குளிக்கலாம். திரிவேணி சங்கமத்துக்கு வரவேண்டிய அவசியமில்லை.
சங்கமத்தின் அனைத்து படித்துறைகளிலும் பக்தர்கள் அமைதியான முறையில் குளித்து வருகின்றனர். வீணான வதந்திகளுக்கும் இடம் தரக் கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.