• Fri. Apr 18th, 2025

பல்கலை. துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க மசோதா- ஆளுநருக்கு பதிலடி

ByA.Tamilselvan

Apr 25, 2022

தமிழக அரசே பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
சமீபகாலமாக தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்குமான மோதல்கள் அதிகரித்துவருகின்றன. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்டசபை தீர்மானங்கள், ஆளுநரின் ஒப்புதலுக்காக நீண்டகாலம் கிடப்பில் இருந்து வருகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன,நாடாளுமன்றத்திலும் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். இதே போல அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் துறைத் தலைவர்களாக உள்ள பேராசிரியர்கள் கூட்டத்தினை ஆளுநர் ஆர்.என்.ரவி உதகையில் தன்னிச்சையாக இன்று கூட்டியிருக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ :ஆர்.என்.ரவி இனி தமிழக ஆளுநர் அல்ல! அவர் பாஜக ஆளுநர்! என குற்றம்சாட்டியிருந்தார்.தி.மு.க உள்ளிட்டபல கட்சியினர் எதிப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்பட உள்ளது.
ஆளுநரின் இந்த போக்குக்கு பதிலடி தரும் வகையில் தமிழக அரசு சட்டசபையில் இன்று சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்ய உள்ளது. அதாவது தமிழக பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை ஆளுநர்தான் தற்போது வரை நியமித்து வருகிறார். ஆளுநருக்கான இந்த அதிகாரத்தைப் பறித்து இனி தமிழக பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
ஏற்கனவே கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்கள் ஆளுநர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசும் ஆளுநரின் அதிகாரத்தைப் பறிக்கும் மசோதாவை இன்று சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளது. சட்டமசோதா நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.