• Wed. Apr 24th, 2024

மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன்

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூரில் கடந்தாண்டு விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை ஜாமின் வழங்கியுள்ளது.
ஆஷிஷின் ஜாமீன் மனு, லக்கிம்பூர் கெரியின் கீழ் மற்றும் அமர்வு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. கடந்த மாதம், இந்த மனுவை விசாரித்த லக்னோ கிளை உயர்நீதிமன்றம் தனது உத்தரவை ஒத்திவைத்தது.

இந்நிலையில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வினோத் குமார் ஷாஹி கூறுகையில், நீதிபதி ராஜீவ் சிங் இன்று (வியாழக்கிழமை) ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார் என்றார். அக்டோபர் 3 ஆம் தேதி லக்கிம்பூர் வன்முறை நிகழ்ந்த நிலையில், ஆஷிஷ் மிஸ்ரா அக்டோபர் 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதுகாப்பு ஆலோசகர் சலில் குமார் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘ஜாமீன் மனு மீதான வாதங்களின் போது, ஆஷிஷ் மிஸ்ரா சம்பவ இடத்தில் இல்லாததை சுட்டிக்காட்டி விவாதித்தோம். நீதிமன்றம் இன்று ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியது. நீதிமன்ற உத்தரவு இன்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றார்.
அக்டோபர் 3, 2021 அன்று, அஜய் மிஸ்ராவுக்குச் சொந்தமான தார் உட்பட மூன்று எஸ்யூவிகள், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக டிகோனியா கிராசிங்கில் கூடியிருந்த விவசாயிகள் மீது ஏறியது. நான்கு விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். அந்த காணொலி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வன்முறையால் ஆத்திரமடைந்த மக்கள், இரண்டு பாஜக தலைவர்களையும், தார் ஓட்டுநரையும் அடித்துக் கொன்றனர். மேலும், தார் உள்ளிட்ட 2 வாகனங்களுக்கும் விவசாயிகள் தீ வைத்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய உ.பி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேரை கைது செய்தது.

சாட்சியங்களை அழித்தாக குற்றப்பத்திதரிகையில் குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சரின் மைத்துனர் வீரேந்திர சுக்லாவுக்கு,நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுக்லாவை எஸ்ஐடி கைது செய்யவில்லை. ஜனவரி 11 அன்று, லக்கிம்பூர் கெரியின் உள்ளூர் நீதிமன்றம் வீரேந்திர சுக்லா நீதிமன்றத்தில் ஆஜராகியபோது அவருக்கு ஜாமீன் வழங்கியது.
அதேபோல், இரண்டு பாஜக தலைவர்கள் மற்றும் தார் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், எஸ்ஐடி இதுவரை ஏழு பேரை கைது செய்துள்ளது. ஜனவரி 21ம் தேதி, நான்கு பேர் மீது எஸ்ஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. ஆதாரங்கள் சரியாக இல்லாததால் கைது செய்த ஏழு பேரில் மூவரை எஸ்ஐடி விடுவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *