• Wed. Jun 7th, 2023

அத்தி பூத்தது போல் பிரதமர் பேட்டி..பளிச் 10 பதில்கள்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லியில் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த நேர்காணல் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒரே நேரத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி ஒளிபரப்பாயின. உத்தர பிரதேச மாநிலத்துக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் சூழலில் மோதியின் இந்தப் பேட்டி, மறைமுக தேர்தல் பரப்புரையாக பயன்படுத்தப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. அந்த நேர்காணலில் உத்தர பிரதேச தேர்தல், வாரிசு அரசியல், விவசாயிகள் பிரச்னை எனப் பல விஷயங்களை மோதி விரிவாகப் பேசினார்.

2014இல் உ.பி.யில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. அதன்பிறகு 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இங்கு வெற்றி பெறும் ஒருவர் தனது வெற்றிக் கதையை இரண்டாவது முறையாக மீண்டும் தொடரமுடியாது என்று கூறும் பழைய கோட்பாட்டை உத்தர பிரதேசம் புறந்தள்ளியிருக்கிறது என்று மோதி குறிப்பிட்டார். ஒரு மணி நேரம் பத்து நிமிடம் நீடித்த நேர்காணலில் பிரதமர் மோதி பேசியவற்றில் முக்கியமான சில அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

  1. எதிர்கட்சிகளை இலக்கு வைத்த பிரதமர்
    • “இரண்டு சிறுவர்களின் இந்த விளையாட்டை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். அவர்களது ஈகோ மிகவும் வளர்ந்துவிட்டது, அவர்கள் “குஜராத்தின் இரண்டு கழுதைகள்” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள். ஆனால் உ.பி அவர்களுக்குப் பாடம் புகட்டியது. இரண்டாவது முறை, “புவா ஜி”(மாயாவதி)யும் இந்த இருவருடன் இணைந்தார். அப்போதும் கூட அவர்கள் தோல்வியடைந்தனர்.

• “காங்கிரஸின் செயல்பாட்டு பாணி மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படை வகுப்புவாதம், ஜாதிவாதம், மொழிவாதம், பிராந்தியவாதம், உறவினர்களுக்கு பதவி அளிப்பது மற்றும் ஊழல் ஆகும். இது இந்த நாட்டின் முக்கிய நீரோட்டத்தில் நீடித்தால், நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு. நாட்டின் இன்றைய நிலைக்கு காங்கிரஸ்தான் முக்கியக் காரணம். இந்த நாட்டிற்கு இதுவரை கிடைத்த பிரதமர்களில், வாஜ்பாய் மற்றும் என்னைத் தவிர, மற்ற எல்லா பிரதமர்களுமே காங்கிரஸ் பள்ளியிலிருந்து வந்தவர்கள்.

2- ராகுல் காந்தி மீது குறி
“நாடாளுமன்றத்திற்கு வராத, காணாமல் போன ஒருவருக்கு நான் எப்படி பதிலளிப்பது? செவிமடுக்காத மற்றும் சபையில் உட்காராத ஒருவர் சொல்லும் கருத்துகளுக்கு நான் என்ன பதில் சொல்வது?”
பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் குறித்து ராகுல் காந்தி, அரசை கடுமையாக தாக்கிப் பேசினார். இது தொடர்பான கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.

3- ஐந்து மாநிலங்களில் பாஜக அலை
• “பாஜக எப்போதும் மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது. ஆட்சியில் இருக்கும்போது, சப்கா சாத், சப்கா விகாஸ் என்ற உணர்வோடு செயல்படுகிறோம். தற்போது ஐந்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதரவாக மிகப்பெரிய அலை வீசுவதை நான் காண்கிறேன். எல்லா இடங்களிலும் பெரும்பான்மை பெறுவோம். இந்த மாநிலங்களில் எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். எங்கெல்லாம் நிலையாக இருந்து வேலை செய்ய பாஜக வுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதோ அங்கெல்லாம் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே அலை வீசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது ஆட்சிக்கு எதிரான அலை அல்ல. பாஜக அரசு எங்கு உள்ளதோ அங்கு வெற்றி எங்களுக்குத்தான்.

4- லக்கிம்புரி கேரி விவகாரம்
• “இந்த சம்பவத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் எந்தக் குழுவை அமைக்க விரும்புகிறதோ அல்லது எந்த நீதிபதி அதை விசாரிக்க வேண்டும் என்று விரும்புகிறதோ, மாநில அரசு அதை ஏற்றுக்கொள்ளும். இதற்கான ஒப்புதலை அரசு அளித்துள்ளது. பாஜகவில் யார் இணைந்தாலும் அவரது பாவங்கள் கழுவப்படும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்தார். உ.பி.யில் சகோதரிகள் மற்றும் மகள்கள் பயம் இல்லாமல் வெளியே வருவது முன்பு கடினமாக இருந்தது. ஆனால் இப்போது குண்டர்கள் கைகூப்பியபடி தாங்களாகவே சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

  1. நாடாளுமன்றத்தில் நேருவை குறிப்பிட்டது பற்றிய பதில்
    • ”யாருடைய தாத்தா அல்லது தந்தைக்கு எதிராககவும் நான் எதுவும் கூறவில்லை. முன்னாள் பிரதமர் ஒருவர் கூறியதையே நான் சொன்னேன். இதை அறியும் உரிமை நாட்டுக்கு உண்டு. நேரு பற்றி நான் பேசுவதில்லை என்கிறார்கள். ஆனால் அவர் பற்றிப் பேசினால் அவர்கள் பிரச்னைகளை எழுப்புகிறார்கள். அவர்களின் பயம் எனக்குப் புரியவில்லை. எவருடைய அப்பா, அம்மா, தாய்வழி தாத்தா, தந்தை வழித் தாத்தா பற்றியும் நான் எதுவும் சொல்லவில்லை. நாட்டின் பிரதமராக இருந்தவர் சொன்னதை நான் சொல்லியிருக்கிறேன். அப்போதைய பிரதமரின் சிந்தனையில் அந்த நேரத்தில் இருந்த நிலை என்ன, இப்போதைய பிரதமரின் சிந்தனையில் தற்போதைய நிலை என்ன என்பதையே நான் விளக்கினேன்.

6- விவசாயிகளின் நலனுக்கான சட்டம்
• “நான் விவசாயிகளின் இதயங்களை வெல்ல வந்துள்ளேன். நான் அவ்வாறே செய்துள்ளேன். சிறு விவசாயிகளின் கஷ்டங்கள் எனக்குப் புரிகிறது. விவசாயச் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காக அமல்படுத்தப்பட்டன. ஆனால் தேசிய நலன் கருதி அவை திரும்பப் பெறப்பட்டன. இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அதனால் இதைப் பற்றி நான் அதிகம் சொல்லமாட்டேன். அதற்கு நாம் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.”

7- தேர்தல் பற்றிய கேள்வி
• “தேர்தல் வேட்பாளர்களை முடிவு செய்யும்போது, எந்தச் சமூகத்திற்கு எத்தனை சதவிகிதம் வாக்குகள் உள்ளன என்று நாம் பார்க்கிறோம். இந்தக் கண்ணோட்டத்தை நாம் மாற்ற வேண்டும். சப்கா சாத், சப்கா விகாஸ் கொள்கையை நாங்கள் பின்பற்ற விரும்புகிறோம். நாட்டை முன்னேற்றுவதற்கு ஒற்றுமை அவசியம். இந்தியாவில் பல மாநிலங்களில் வாரிசு அரசியல் காணப்படுகிறது. காஷ்மீர் தொடங்கி பல மாநிலங்களில் குறிப்பாக தமிழகம், ராஜஸ்தான், ஹரியாணாவில் இதைக் காணலாம். வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து.

8- பஞ்சாபில் மிகவும் நம்பகமான பாஜக
• “இன்று பாஜக பஞ்சாபில் நம்பகமான கட்சியாக உருவெடுத்துள்ளது. சமூக வாழ்வில் மூத்தவர்கள், அரசியலின் பெரிய தலைவர்கள் எனப் பலரும் தங்கள் பழைய கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். சிறு விவசாயிகளுக்காக நாங்கள் செய்த பணிகள் பஞ்சாபில் மிகப்பெரிய அளவில் அவர்களைச் சென்றடைந்துள்ளது.

9- மாநிலங்களுக்கு முன்னுரிமை
• “நாட்டின் வளர்ச்சிக்கு, உள்ளூர் பன்முகத்தன்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறும் கட்சி பாஜக. முன்னதாக, வெளிநாட்டு தலைவர்களின் சுற்றுப் பயணம் டெல்லி வரை மட்டுமே இருந்தது. சீன அதிபரை நான் தமிழகத்திற்கு அழைத்துச் சென்றேன். பிரான்ஸ் அதிபரை உ.பி.க்கு அழைத்துச் சென்றேன். ஜெர்மனி அதிபரை கர்நாடகாவுக்கு அழைத்துச் சென்றேன். நாட்டின் சக்தியை உயர்த்துவது, ஒவ்வொரு மாநிலத்தையும் ஊக்குவிப்பது எங்கள் பணி. ஐநா சபையில் நான் தமிழில் பேசினேன். உலகின் மிகத்தொன்மையான மொழி இந்தியாவிடம் உள்ளது என்பதில் உலகமே பெருமை கொள்கிறது.

10- அரசின் பொறுப்பு
• “அரசின் வேலை வியாபாரம் செய்வது அல்ல. வணிக உலகம்தான் இந்த வேலையைச் செய்யும். ஏழைகளுக்கு உணவு, வீடு, கழிப்பறை கட்டித் தருவது போன்றவை அரசின் வேலை. அவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதும் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதும் அரசின் பணி. சிறு விவசாயிகளைப் பற்றி சிந்திப்பதே எனது அரசின் முன்னுரிமை. இந்தப் பொறுப்புகள் அனைத்தும் அரசாங்கத்தினுடையது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *