ஜப்பான் நாட்டை சேர்ந்த விண்வெளி சுற்றுலாப் பயணி ஒருவர் விண்வெளியில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
டப்பாவில் அடைக்கப்பட்ட வேகவைத்த கானாங்கெளுத்தி மீன், இனிப்பு சாஸில் சமைக்கப்பட்ட மாட்டிறைச்சி உள்பட இன்னும் சில ஜப்பானிய உணவு வகைகள் விண்வெளி வீரர்களுக்கு கொடுத்து அசத்தியுள்ளார்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த யுசாகு மேசாவா இந்த அறிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இம்மாதம் 11ம் தேதியன்று காலை 9.40 மணிக்கு, வானில் 248 மைல் தூரத்தை 8 மணி நேரம் 34 நிமிடங்களில் கடந்து இது சாத்தியமாகி உள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான uber eats அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
விண்வெளி வீரர் அந்த உணவுப் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு விரல் சைகை மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். விண்வெளிவீரர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவை விட இந்த உணவு அவர்களுக்கு நிச்சயம் புத்துணர்ச்சியை அளித்திருக்கும் என்று uber நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உணவுகளை தனது சொந்த செலவில் விண்வெளி வீரக்ளுக்கு விருந்தாக கொடுத்துள்ளார் கோடீஸ்வர மனிதரான யுசாகு மேசாவா.
உபெர் ஈட்ஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பதிவில், “நாங்கள் இந்த உலகிலேயே இல்லை. எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்” என்று பதிவிட்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்ட உணவு பொட்டலத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
46 வயதான மேசாவா மற்றும் அவருடைய நண்பர் யோசோ ஹிரானோ(36) ஆகியோர் 2009ம் ஆண்டுக்கு பின் முதன்முதலாக சொந்த செலவில் விண்வெளி மையத்துக்கு சென்ற மனிதர்கள் என்ற சாதனையையும் படைத்து உள்ளனர்.