

வங்காளதேசத்தின் 50-வது சுதந்திர தின விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.

1971-ம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இந்தியாவின் உதவியால், பாகிஸ்தானில் இருந்து பிரிந்து, வங்காளதேசம் தனி நாடாக உருவானது. இதையொட்டி கொண்டாடப்படும் 50-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் டாக்காவில் நடைபெற்ற முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்த் விழாவில் பேசியதாவது:-
இந்தியாவும் வங்காளதேசமும் விடுதலை போரின்போதிலிருந்து தனித்துவமான நட்பை கொண்டுள்ளது. 50 வருடங்களுக்கு முன்பு தெற்காசியாவில் வங்காளதேசம் என்ற பெருமைமிக்க தேசம் பிறந்தது. அப்போது நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த ஏராளமான வங்காளதேசத்து மக்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவர்களுடைய தியாகமும், நோக்கமும் தான் இந்த தேசத்தை உருவாக்கி இருக்கிறது.
1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு உதவியதை நாங்கள் பெருமையாகவும், கடமையாகவும் கருதுகிறோம். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான வங்காளதேசத்து மக்களின் வீரத்தையும், வெற்றியையும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் இன்றும் மகிழ்வுடன் நினைவு கூர்கிறோம். மக்களின் மன உறுதியை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது என்ற பாடத்தையும் உலகுக்கு உணர்த்தியது.
வங்காளதேசத்தை நிறுவிய ஷேக் முஜ்பூர் ரகுமானுடைய கனவு, இந்நாட்டை அரசியல் ரீதியாக சுதந்திரம் அடைய செய்வது மட்டுமல்ல, நேர்மையான அனைத்தையும் உள்ளடக்கிய நாடாக வங்காளதேசம் திகழ வேண்டும் என்பதும் தான். துரதிர்ஷ்டவசமாக அவரது கனவு அவரது வாழ்நாளில் நிறைவேறாமல் போய்விட்டது. இருப்பினும் அவரது கனவு இன்றைய வங்காளதேச மக்களின் கடின உழைப்பாலும், ஒற்றுமையாலும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. வங்காளதேச மக்களை முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசினா சிறப்பாக வழிநடத்துகிறார்.
என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.
