


மும்பையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட உடல்வலிக்குப் பயன்படுத்தும் மாத்திரைகளை போதைப்பொருளாக விற்பனை செய்த குற்றத்திற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய சென்னை போலீஸார் தனிப்படைகளை அமைத்துள்ளனர். அப்படையினர், காவல் நிலைய போலீஸாருடன் ஒருங்கிணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பூக்கடை போலீஸார் நேற்று முன்தினம் காலை சென்னை, மெமோரியல் ஹால் ரோட்டில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் கண்காணித்தனர்.
அப்போது, அங்குள்ள ஒரு அறையில் தங்கியிருந்த 2 பேர் சட்டவிரோத விற்பனைக்காக உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருட்களாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸார் அதை மும்பையிலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வந்ததாக மகாராஷ்டிரா மாநிலம், கிழக்கு மும்பை முருகையா (40), அதே மாநிலம், தாராவியைச் சேர்ந்த கார்த்திக் பீம்ராவ் கோலி (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான உடல் வலி நிவாரண மாத்திரைகள், ரூ.3,85,550 மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் மும்பையிலிருந்து உடல்வலி நிவாரண மாத்திரைகளை கடத்தி வந்து, பூக்கடை பகுதியில் உள்ள லாட்ஜ்களில் தங்கி, தூக்க மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

