• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கோவில் நிலத்தில் புதிய கட்டுமானத்திற்கு தடை 300 ஏக்கர் நில மோசடி குற்றச்சாட்டால் பரபரப்பு..,

ByPrabhu Sekar

Aug 13, 2026

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலம் தொடர்பான வழக்கில், தாம்பரம் மாவட்ட முன்சிப் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வசித்து வருவதாக கூறப்படும் ஒருவர், அனுமதியின்றி கூடுதல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. மேலும், புதிய கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கவும், ஏற்கனவே கட்டப்பட்ட கூடுதல் கட்டுமானத்தை இடிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோவில் நிர்வாகம் தாக்கல் செய்த பட்டா மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட நிலம் கோவிலுக்குச் சொந்தமானது என்பதை உறுதி செய்தது. இதையடுத்து, அந்த நிலத்தில் இனிமேல் எந்தவிதமான புதிய கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என நிரந்தரத் தடை உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், ஏற்கனவே கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் கூடுதல் கட்டுமானத்தை இடிக்க போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

இதற்கிடையே, மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் சொத்துகளை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கோவில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த 16 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததுடன், அங்குள்ள வீடுகளை அகற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அப்பகுதி மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து, வீடுகளை காலி செய்ய பொதுமக்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சமூக ஆர்வலர் ஜெயபால் செய்தியாளர்களை சந்தித்து, தேனுபுரீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பாக சுமார் 300 ஏக்கர் அளவிலான நில மோசடி நடைபெற்றுள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அறநிலையத்துறை சார்பிலேயே நிலங்கள் மோசடி செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் அதே துறையின் மூலமாக கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஆவணங்கள் அனைத்தும் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்களை வெளியேற்ற அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பிய அவர், இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நீதிமன்றத் தடை உத்தரவு, ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மற்றும் 300 ஏக்கர் நில மோசடி குற்றச்சாட்டு ஆகியவற்றால் மாடம்பாக்கம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.