பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ராவின் மகள் மற்றும் மருமகன் என்று கூறி மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக இருப்பவர் பி.கே.மிஸ்ரா. இவரின் மகள் மற்றும் மருமகன் என்று கூறி ஒடிசாவில் கட்டிடங்கள், சுரங்க உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் இருந்து பல கோடி ரூபாயை பெண் உள்ளிட்ட இருவர் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுரங்க உரிமையாளர் ஒருவரின் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது புவனேஸ்வரில் உள்ள இன்ஃபோசிட்டி- நந்தன்கானன் சாலையில் உள்ள ஒரு ஆடம்பர அலுவலகத்தில் பணிபுரியும் ஹன்சிதா அபிலிப்சா என்ற பெண் , இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. அங்கு தன் செல்வாக்கைப் பயன்படுத்தி டெண்டர்களை இறுதி செய்வதாக ஏமாற்றி பணத்தை ஏமாற்றியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த மோசடியில் ஹன்சிதா அபிலிப்சா மற்றும் அவரது கணவர் அனில் மொஹந்தி ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது. ஒடிசாவின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக கூறி இவர்கள் பலரை ஏமாற்றியதும் விசாரணையில் தெரிய வந்தது. பாட்டியா பகுதியில் பதுங்கியிருந்த அவர்கள் இருவரையும் ஒடிசா போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.