இந்தியாவின் பணக்கார மற்றும் ஏழ்மையான முதலமைச்சர் குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ஏடிஆர்) அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை மாநில சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 31 தற்போதைய முதலமைச்சர்களின் பதவி பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தன. இந்த முதலமைச்சர்கள் கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் இருந்து இந்த விவரங்கள் எடுக்கப்பட்டு அவை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இந்தியாவின் 31 மாநில முதலமைச்சர்களில் பணக்கார முதலமைச்சர் பட்டியலில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பெயர் இருப்பதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான அவருக்கு ரூ.931 கோடிக்கு சொத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. 2வது இடத்தில் அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பேமா காண்டு ரூ.332 கோடி மதிப்பிலான சொத்துக்களை வைத்திருப்பதாகவும், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா ரூ.51 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும், நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ ரூ.46 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் 4வது இடத்திலும், மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் ரூ.42 கோடி மதிப்புடைய சொத்துக்களுடன் 5வது இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மிகக்குறைந்த சொத்து மதிப்புக் கொண்ட ஏழ்மையான முதலமைச்சர்களின் பட்டியலில் முதலிடத்தில் மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி ரூ.15 லட்சம் சொத்து மதிப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா ரூ. 55 லட்சமும், கேரளாவைச் சேர்ந்த பினராயி விஜயன் ரூ. 1 கோடி சொத்துக்களுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் அதிஷி ரூ.1 கோடியும், ராஜஸ்தானின் பஜன் லால் சர்மா ரூ.1 கோடி சொத்து வைத்திருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 14-வது இடம் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.8 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.8,88,75,339 சொத்து வைத்துள்ள அதேவேளையில், எந்தக் கடனும் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. எனினும், முதல்வர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட வருமானமாக ரூ.28 லட்சம் கிடைக்கிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதவியில் ஒரு முதலமைச்சரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 52.59 கோடி என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தனிநபர் நிகர தேசிய வருமானம் 2023-2024-ல் தோராயமாக ரூ.1,85,854 ஆக இருந்தபோது, ஒரு முதலமைச்சரின் சராசரி சுய வருமானம் ரூ.13,64,310 ஆகும். இது இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானத்தை விட 7.3 மடங்கு அதிகமாகும்.