ப்ளூ டிக் சேவையை பயன்படுத்திக்கொள்ள இந்தியாவிற்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.
உலகின் மிகப் பெரும் பணக்கார தொழிலதிபரான எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டர் சமூக வலை தளத்தை வாங்கினார். இதைத் தொடர்ந்து அவர், அதன் சேவை மற்றும் நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறார். ட்விட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர். இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனர்கள் ட்விட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்நிலையில், ட்விட்டர் ‘புளூ டிக்கிற்கு’ இனி மாதம் 7.99 டாலர் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவுசெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு நாடுகளில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், மாதாந்திர கட்டணத்தை அமல்படுத்த உள்ளதாக மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.இந்தச் சேவையானது இந்தியாவில் பெற மாதம் ரூ. 719 செலுத்தி ப்ளூ டிக்கை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.