மதுரையில் அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் சேவை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஹெலிகாப்டர் சேவை அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து ரூ.4.25 லட்சம் ஜி.எஸ்.டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள சுற்றுலா தலங்களை ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரில் சென்று சுற்றிப்பார்க்கும் வகையில், மேலூர் அருகே தெற்குத் தெரு கிராமத்தில் தனியார் சார்பில் ஹெலிகாப்டர் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த ஹெலிகாப்டரில் பயணிக்க ஒரு நபருக்கு 6,000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் நிறுவனமும், தனியார் கல்லூரியும் இணைந்து அளித்து வரும் இந்த ஹெலிகாப்டர் சேவை மூலம் அழகர் கோவில், ஒத்தக்கடை யானை மலை, மீனாட்சி அம்மன் திருக்கோவில், திருப்பரங்குன்றம், கீழக்குயிலுள்ள புராதன சின்னங்கள் உள்ளிட்டவற்றை 15 நிமிட பயணத்தில் கண்டு ரசிக்கலாம்.
இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் சேவை அனுமதி பெறாமல் அளிக்கப்பட்டு வருவதாக மதுரை கோட்ட நுண்ணறிவுப் பிரிவினருக்கு புகார் சென்றது. விசாரணை முடிவில் தனியார் நிறுவனத்திடமிருந்து 4.25 லட்ச ரூபாய் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை கோட்ட நுண்ணறிவுப் பிரிவின் இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, மதுரையில் இரண்டு தனியார் நிறுவனங்கள் பொதுமக்களுக்கான ஹெலிகாப்டர் சர்வீஸ் துவக்கி உள்ளனர்.
இரு நிறுவனங்களும் முன்பதிவின்றியும் உரிய ஆவணங்களின்றியும் வணிகம் செய்வதாக மதுரை கோட்ட நுண்ணறிவுப்பிரிவு அலுவலர்களுக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில் அலுவலர்கள் கடந்த டிசம்பர் 25 அன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது தகுந்த ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதனையடுத்து அந்நிறுவனங்களுக்கு 4.52 லட்ச ரூபாய் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு அதனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.