• Wed. Apr 24th, 2024

சசிகலா – தினகரன் மோதல் : காலியாகும் அமமுக கூடாரம் ?

இதோ ஒட்டுமொத்தமாக கட்சியிலிருந்து விலகுகிறோம் என சொல்லி தங்களின் ராஜினாமா கடிதங்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அனுப்பி அ.ம.மு.க.வில் ஏக ரகளை செய்திருக்கிறார்கள் அக்கட்சி தொண்டர்கள்.


அமமுகவில் சசிகலா ஆதரவு நிர்வாகிகள் சிலரால் கட்சிக்குள் சின்ன சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. நிர்வாகிகள் சிலர் மீது டிடிவி தினகரன் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.


திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகர அ.ம.மு.க. செயலாளராக இருந்தவர் கந்தன். லோக்கலில் கட்சிக்காரர்களிடமும் பொது மக்களிடமும் பரவலான அறிமுகமானவர். சசிகலாவை அவ்வப்போது சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் சசிகலாவின் நிகழ்ச்சிகளில் அனைத்திலும் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொள்கிறார் கந்தன். சசிகலா நிகழ்ச்சிகளுக்கு தலைமையின் உத்தரவோ அனுமதியோ இல்லாமல் கலந்து கொள்ளக்கூடாது என மா.செ.க்கள் மூலமாக கட்சியின் நிர்வாகிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறாராம் தினகரன்.

அதனை மீறி செயல்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்குகிறார். அந்த வகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, கந்தனை நீக்கினார் தினகரன். இதற்கு ஒட்டுமொத்த பூந்தமல்லி நகர அ.ம.மு.க.வினரும் எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார்களாம். கந்தனை நீக்கியதை திரும்பப்பெற வேண்டும்.. அவர் முக்கியமான நிர்வாகி.. அவரை எப்படி நீக்கலாம் என போர்க்குரல் உயர்த்தினார்கள்.

ஆனால் இதை தினகரன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். நிர்வாகிகள் எதிர்ப்புக்கு தினகரன் அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிலையில், நேற்று சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு படையெடுத்த பூந்தமல்லி அ.ம.மு.க.வினர் தினகரனை சந்திக்க முயற்சித்தனர். அனுமதி கிடைக்கவில்லை. தினகரன் வீட்டில் இல்லை என்றும், இங்கிருந்து கிளம்பிச்செல்லுங்கள் என்றும் வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன. இதனால் அங்கே இருந்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


தினகரனின் இந்த நடவடிக்கையை ஏற்க மறுத்த நிர்வாகிகள் அங்கேயே கூச்சல் போட்டுள்ளனர். அதோடு தங்களின் பதவிகளைக் கூண்டோடு ராஜினாமா செய்து அதனை தினகரனுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அ.ம.மு.க. வட்டாரங்களில் திடீர் பரபரப்பை உருவாக்கியிருந்தது. சசிகலாவால் அமமுகவிற்குள் ஏற்பட்டு இருக்கும் இந்த சலசலப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தினகரன் விரும்பிய போது அதை தடுத்துள்ளார் சசிகலா.அதே போல தனியாக களம் கண்டாலும் தேர்தல் செலவிற்கு பணம் கொடுக்கவும் சசிகலா தரப்பில் மறுத்துள்ளனர். இதனால் அப்போது இருந்தே இந்த உரசல்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சசிகலா அதிமுக தலைமையை பிடிக்க போராடிக்கொண்டிருக்கும் போது நான் எதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டும்

அமமுகவை தலைமை ஏற்று நடத்துங்கள் என்று அழைப்பு விடுத்தும் சசிகலா மறுத்துள்ளார். ஆகவே எந்த வித நடவடிக்கையும் கட்சியில் இல்லாததால் பலரும் கட்சி இருந்து விலகி வருகின்றனர். பலர் அதிமுக பக்கம் தாவும் போது , போயும் போயும் அங்க ஏன் போறீங்க போறதா இருந்தா திமுகவுக்கு போங்க என்று தினகரன் கட்சியினருக்கு வாழ்த்து கூறி வழியனுப்பி வைக்கிறாராம். இந்த நிலை நீடித்தால் கட்சிக்கு கலைத்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்ளலாம் என்றும் தினகரன் யோசனையில் உள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *