• Wed. Apr 17th, 2024

திருச்சி, மதுரையில் நெரிசலை குறைக்க உயர்மட்ட சாலை – தமிழக அரசு

Byமதி

Dec 10, 2021

திருச்சி மற்றும் மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கு ரூ.2.80 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், நடப்பு 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் 27.8.21ல் பொதுப்பணித்துறை அமைச்சர், ‘திருச்சி மற்றும் மதுரையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘திருச்சி மாநகரில் தலைமை தபால் நிலையத்தில் இருந்து காந்தி சிலை, முத்தரையர் சிலை வழியாக நீதிமன்ற ரவுண்டானா வரையில் உயர் மட்ட சாலை அமைக்கப்படும்.ஓடத்துறை காவிரி பாலம் முதல் அண்ணா சிலை மற்றும் கலைஞர் அறிவாலயம் வழியாக மல்லாட்சிபுரம் வரையில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.

மதுரை மாநகரில் விமான நிலையத்திற்கு செல்லும் பயண நேரத்தை குறைக்கும் பொருட்டு நெல்பேட்டை முதல் அவனியாபுரம் புறிவழிச்சாலை சந்திப்பு வரையில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். இப்பணிகள் மதுரை மற்றும் நகரங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை ஆய்வுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பின்படி, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் முன்மொழிவு அனுப்பி இருந்த கடிதத்தில், திருச்சியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கு ரூ.124 லட்சமும், மதுரையில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கு ரூ.156 லட்சம் என மொத்தமாக ரூ.2.80 கோடியை ஒதுக்கீடு செய்யும்படி கூறப்பட்டிருந்தது. இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு ரூ.2.80 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ளது. முதல்கட்டமாக 2021-22ம் நிதியாண்டில் ரூ.1.12 கோடி வழங்கப்படும். மீதம் உள்ள தொகை பிறகு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *