• Tue. Feb 18th, 2025

பட்டாகத்தியுடன் ரயில் பயணம் … மாணவன் கைது.

ByA.Tamilselvan

Sep 23, 2022

ரயில்களில் பட்டாக்கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில், ஓடும் ரயிலில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், கையில் பட்டாக் கத்தியை சுழற்றிக் கொண்டும் கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறது. மின்சார ரயிலில் தொங்கியபடி தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று பயணம் செய்தனர். சென்னை – திருத்தணி மின்சார ரயிலில் அட்டூழியம் செய்த மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார். ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 6 பேர் ஏற்கனவே ரயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பட்டாக்கத்தி வைத்திருந்ததாக ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மாணவனை போலீசார் கைது செய்தது. கத்தி வைத்திருந்து போலீசை கண்டதும் தப்பி ஓடிய மாணவன் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பட்டாக்கத்தியுடன் ரயிலில் பயணம் செய்து பயணிகளை அச்சுறுத்தினால் இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 153ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். விஷம செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.