தீங்கு விளைவிக்கும் ரசாயனம் தடவிய மீன்களை விற்பனை செய்வதாக முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு புகார்கள் வந்த நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையகம் சமீபத்தில் மீன் சந்தைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து, காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை மற்றும் நொச்சிக்குப்பத்தில் உள்ள மூன்று முக்கிய நகரச் சந்தைகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழு ஆய்வு செய்த போது
சிந்தாதிரிப்பேட்டை சேமிப்பு அலகுகளில் 200 கிலோ கெட்டுப்போன மீன்களும், காசிமேட்டில் 75 கிலோ கெட்டுப்போன மீன்களும் குளிர் சாதன பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பழைய கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் உயிர் மருத்துவக் கழிவு விதிமுறைகளின்படி அதனை அழித்தனர்.
கூடுதலாக, பெரிய மற்றும் சிறிய விற்பனையாளர்களிடமிருந்து குறைந்தது 13 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனெனில் அவற்றில் ஃபார்மலின் போன்ற நச்சு கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும், அதனால் அவற்றை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மீன் வகைகளில் பெரும்பாலானவை ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு ரயில்களில் வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.