• Fri. Apr 18th, 2025

மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசல்..,

ByKalamegam Viswanathan

Apr 15, 2025

மதுரையில் கடந்த 16 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மேலமடை மற்றும் கோரிப்பாளையம் பகுதி மேம்பால பணிகளால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறுகிறது. எப்போதும் நிறைவடையும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

மதுரை மாநகரில் கோரிப்பாளையம் சந்திப்பிலும், சிவகங்கை சாலை மேலமடை அப்போலோ சந்திப்பிலும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரண்டு மேம்பால திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மதுரையின் வடபகுதியில் முக்கிய சந்திப்பாக திகழும் கோரிப்பாளையத்தில் மேம்பாலம் அமைப்பதற்கு ரூ.190.40 கோடியும், மேலமடை அப்பல்லோ சந்திப்பில் மேம்பாலம் அமைப்பதற்கு ரூ.150.28 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குறிப்பாக ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அருகே அமைந்துள்ள கோரிப்பாளையம் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த நெரிசலை குறைப்பதற்காக தமுக்கம் மைதானத்தில் இருந்து தேவர் சிலை வழியாக ஏவி மேம்பாலத்தை ஒட்டிய பகுதியில் பாலம் அமைக்கப்பட்டு அண்ணா சிலை அருகே இடதுபுறம் நெல்பேட்டை, வலது புறம் யானைக்கல் சந்திப்பையும் இணைக்கும் வகையில் இந்தப் பாலம் அமைய உள்ளது. அத்துடன் செல்லூர் பாலம் ஸ்டேஷனில் தொடஙாகி அமைக்கப்படும் பாலம் கோரிப்பாளையம் வழியாக ஏவி மேம்பாலத்தை ஒட்டி அமைய உள்ள புதிய பாலத்தோடு இணைக்கப்பட உள்ளது. 61 தூண்கள் மற்றும் 62 கண்களுடன்  மொத்தம் 2 கி.மீ நீளத்திற்கு இந்த மேம்பாலம் அமையவுள்ளது. 1.300 கி.மீ நீளத்திற்கு 12 மீட்டர் அகலத்துடன் ஒரு வழித்தட மேம்பாலமாகவும் மேலும், கோரிப்பாளையம் சந்திப்பு பாலத்திலிருந்து செல்லூர் நோக்கி செல்ல கூடுதலாக 700 மீட்டர்  நீளத்திற்கு 8.50 மீட்டர்  அகலத்துடன் அமையவுள்ளது. 

மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பக்கவாட்டின் இருபுறமும் அணுகுசாலை  அமைக்கப்படுவதுடன், பாதசாரிகள் நடந்து செல்ல நடைமேடையுடன் கூடிய மழைநீர் வடிகால், பேருந்து நிறுத்த வசதிகள் ஆகியன அமைக்கப்படவுள்ளன. மேலும், பீபீ குளம் – காந்தி அருங்காட்சியகம் சாலை சந்திப்பில் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்காக ஒரு வாகன சுரங்கப்பாதை (Vehicle Under Pass) அமைக்கப்படவுள்ளது.

மேலும் மதுரையில் இருந்து தொண்டி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், மதுரையில் இருந்து சிவகங்கை செல்வதற்கும், பாண்டி கோவில் வழியாக அமைந்துள்ள வட்டச் சாலையை அணுகுவதற்கும் ஏற்ற வகையில் மேலமடை அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பில், மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை ஆவின் சந்திப்பில் இருந்து கோமதிபுரம் ஆறாவது தெரு சந்திப்பு வரை இந்த பாலம் அமைய உள்ளது.

இக்காலத்தில் கீழாக உள்ள போக்குவரத்து சிக்னலுக்கு மாற்றாக இப்பகுதிகளில் வட்ட வடிவ சந்திப்பு (Roundabout) அமைக்கப்பட உள்ளது. மேலமாடி அப்பல்லோ சந்திப்பில் அமைய உள்ள மேம்பாலம் 1,100 மீட்டர் நிலத்திற்கு 30 தூண்களுடன் நிறுவப்பட உள்ளது. இந்தப் பாலம் 17.2 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். மேற்கண்ட இரு பாலங்களிலும் அணுகு சாலைகள், வாகன நிறுத்தங்கள், மழைநீர் வழிந்தோடும் வசதிகள் ஆகியவற்றுடன் நவீன வடிவத்தோடு அமைக்கப்பட உள்ளது.

ஏறக்குறைய பணிகள் துவங்கி 16 மாதங்களை கடந்த நிலையிலும் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன்வைக்கின்றனர். மேலும் இப்பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக நாள்தோறும் சிரமப்படுவதாகும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து செல்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன் கூறுகையில், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள கூடிய இடத்திற்கு அருகே தான் கோரிப்பாளையம் சந்திப்பு அமைந்துள்ளது.

இங்கு நடைபெறும் பால பணிகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கோரிப்பாளையம் பகுதியில் இருந்து அண்ணா சிலை பகுதியில் செல்வதற்கு மிக வசதியான மேம்பாலம் தமிழக அரசால் அமைக்கப்பட்டு வந்தாலும் தற்போது, இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் விரைந்து இந்த பணிகளை அரசு முடிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர் கூறுகையில், இந்தப் பகுதியில் பாலம் அமைப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால் இப்பகுதியில் போக்குவரத்து மாறுதல் என்ற அடிப்படையில் சிறு சிறு சந்துகளுக்குள்ளும் வாகனங்கள் சென்று வருவதால் அப்பகுதியில் வாழக்கூடிய மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. குறிப்பாக செல்லூர் சந்திப்புக்கு அருகே கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். பாலத்திற்கான பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

மதுரை தொண்டி சாலையில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணை சந்திப்பில் இருந்து கோமதிபுரம் ஆறாவது மெயின் ரோடு வரை கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மேலமடை வ உ சி நகர் பகுதியைச் சார்ந்த குடியிருப்பு வாசி ராசு கூறுகையில், மேலமடை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த பாலம், வடபுறம் உள்ள கருப்பாயூரணி காளி காப்பான் பாண்டி கோயில் சக்கிமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாணவ மாணவியர் இதன் வழியாகத்தான் மதுரைக்குள் செல்ல வேண்டும். கடந்த ஓராண்டுக்கு மேலாக அவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போன்று ஆவின் சந்திப்பில் இருந்து மேலமடை வழியாக சிவகங்கை கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பால பணி தொடங்கியதிலிருந்து இப்பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஆகையால் பாலப் பணிகளை துரிதப்படுத்தினால் தான் மேலமடை வ உ சி நகர் கோமதிபுரம் யாகப்பா நகர் ஆகியவை மக்கள் அடர்த்தியாக வாழ்கின்ற பகுதியாகும். இந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக வேணும் பாலப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை விரைவு படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய மேலும் அடையை சேர்ந்த பெரியவர் கிருஷ்ணன் கூறுகையில், மாற்றுப் பகுதியில் இயக்கப்பட்டு வரும் போக்குவரத்து மருது பாண்டியர் நகர் உள்ளிட்ட வெறும் 20 அடி சந்துகளுக்குள் நடைபெறுவதால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் பாலத்தின் கட்டுமான பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்றார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, மக்களுக்கு பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படாத வண்ணம் தான் நாங்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பாலப்பணிகள் நடைபெறும் போது ஒரு சில இடங்களில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும். அதனை கண்டறிந்து அவ்வப்போது சரி செய்து வருகிறோம் என்றனர்.