• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி..,
ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு..!

Byவிஷா

Mar 7, 2022

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பாரம்பரிய நெல் விதைகள் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அழிந்துவரும் பாரம்பரியமிக்க விவசாயத்தை பெருக்கவும் தமிழர்கள் பயன்படுத்திய பாரம்பரிய மிக்க நெல் விதைகளை கண்டுபிடித்து அவற்றை மீண்டும் இயற்கை முறையில் வளர்க்க வேண்டிய முயற்சிகளும் நடந்து வருகிறது. பாரம்பரிய மிக்க நெல் விதைகளை பற்றி தெரிந்து கொள்ள மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூரில் வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் வேளாண் கருத்தரங்க நிகழ்ச்சி அட்மா குழு தலைவர் டாக்டர் செழியன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த பாரம்பரிய நெல் விதைகள் கண்காட்சியில் சிவன் சம்பா, தங்கம் சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரக சம்பா, சேலம் சன்னா, ஆத்தூர் கிச்சடி சம்பா உள்ளிட்ட 27 வகையான நெல் ரகங்களும் 15 பருப்பு வகைகளும் இடம் பெற்றிருந்தன. மேலும் விதைகள், காய்கறிகளும் காட்சி படுத்தப்பட்டன. இயற்கை விவசாயம் குறித்த ஆர்வத்தில் வந்த விவசாயிகளுக்கு ஆத்தூர் வட்டார உதவி இயக்குனர் குமாரசாமி ஆலோசனைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து பாரம்பரிய விவசாயம் குறித்த விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அலுவலர்கள் ஜானகி, தாமரைச்செல்வன், சுரேந்திரன், பிரவீன், இமயம் மற்றும் ரோவர் கல்லுரி வேளாண் மாணவ மாணவிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இறுதியாக வேளாண்மை துறை அலுவலர் கௌதம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.