ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது .
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்தநிலையில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை வந்ததால், ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். எனவே அருவிக்கு செல்லும் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, மீன் காட்சியகம், தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வெள்ளம் காணப்பட்டது.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. மீன் சமைத்து தருபவர்கள், எண்ணெய் மசாஜ் செய்பவர்கள், படகு ஓட்பவர்கள் என அனைவருக்கும் கள்ளாகட்டியது. கொரோனவால் மிகவும் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களுக்கு இந்த மக்கள் கூட்டம் சற்றே ஆறுதல் அளித்தது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் சென்று காவிரி அழகை கண்டு ரசித்தனர். மெயின் அருவியில் தடையை மீறி ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்தனர். சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்ததால் பஸ் நிலையம், அஞ்செட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பரிசல் துறை, நடைபாதை, மசாஜ் செய்யும் இடம், பஸ் நிலையம் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.