

இந்தியாவின் பழமையான கட்சியான காங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. போட்டியிடும் இருவருமே தென்மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்படத்தக்கது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. நாட்டின் பழமையான கட்சி என்ற பெருமைக்குரிய காங்கிரஸ் கட்சிக்கு வயது 137. இந்த நெடிய பயணத்தில், அந்த கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்பட்டிருப்பது இது 6-வது முறை ஆகும். இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை. 24 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குடும்பத்தைச் சேராத ஒருவர் இன்றைய தேர்தல் மூலம் தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போகிறார். இன்றைய தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் என இருவர் களத்தில் நின்றாலும், யார் வெற்றி பெற்றாலும் அவர் தென் மாநிலத்தவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். மல்லிகார்ஜூன கார்கே, நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தை சேர்ந்த மூத்த தலைவர். அதே போன்று சசி தரூர் மற்றொரு அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர் ஆவார்.
