1938இல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் எஸ்.சுந்தரேச அய்யரின் மகனாகப் பிறந்தார் காத்தாடி ராமமூர்த்தி. 1960-களில் ‘இஃப் ஐ கெட் இட்’ என்று சோ போட்ட நாடகத்தில் இவர் ‘காத்தாடி’ என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ‘காத்தாடி’ என்ற அடைமொழியைப் பெற்றார்.கும்பகோணம் பாணாதுரை பள்ளியில் படித்து 1958இல் விவேகானந்தா கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரியில் பயிலும் நாட்களிலேயே ராமமூர்த்தி நாடகங்களில் நடிப்பதை பெரிதும் விரும்பினார். அவரது நாடகங்கள் மக்களிடையே மிகப் பிரசித்தமானவை. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, தேவனின் ‘கோமதியின் காதலன்’ என்ற நாடகத்தில் வில்லனின் கைத்தடி பக்கிரி வேடமேற்று நடித்தார். நகைச்சுவை நடிகராக இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவையாகும். இவர் மேடை நாடகங்களில் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார். இவரது நாடக குழுவில் நடிக்க முதல் வாய்ப்பைப் பெற்று பின்னர் பிரபலமடைந்தவர்களுள் சோ.ராமசாமி, விசு, டெல்லி கணேஷ் மற்றும் கிரேசி மோகன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் தமிழில் மேடை நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.இப்படி பல்வேறு கலைகளில் சிறந்தவரான காத்தாடி ராமமூர்த்தி பிறந்த தினம் இன்று..!