• Sun. Oct 1st, 2023

இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்

ByKalamegam Viswanathan

Jun 3, 2023

புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று (ஜூன் 4, 1941).

தர்சன் அரங்கநாதன் (Darshan Ranganathan) ஜூன் 4, 1941ல் வித்யாவதி மார்கனுக்கும் சாந்தி சுவரூப்புக்கும் பிறந்தார். இவர் தில்லியில் அடிப்படைக் கல்வி கற்றார். இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் 1967ல் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். தில்லி மிராண்டா கல்லுரியில் விரிவுரையாளராகச் பணியில் சேர்ந்தவர், பின்னாட்களில் அக்கல்லூரியின் வேதியியல் துறையின் தலைமையை ஏற்றுள்ளார். பிறகு லண்டனிலுள்ள ராயல் கழகத்தின் ‘கண்காட்சி 1851’ ஆய்வுதவி பெற்று, முதுமுனைவர் பட்ட ஆய்விற்காக இலண்டன் இம்பீரியல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு இவர் டிரெக் பார்ட்டனிடம் ஆய்வு செய்துள்ளார். தர்சன் அரங்கநாதன் 1970ல் கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் ஆய்வைத் தொடங்கியுள்ளார். இதே கான்பூர் தொழில்நுட்பக்கழகத்தில் பேராசிரியராக இருந்த எஸ். அரங்கநாதனை மணந்தார்.

தன் கணவரோடு இணைந்து இவர் கரிம வினை இயங்கமைப்பில் உள்ள அறைகூவலான சிக்கல்கள் (1972), உயிர்த்தொகுப்புக் கலை: தொகுப்பு வேதியியலாளர்களுக்கான அறைகூவல் (1976), கரிம வினை இயங்கமைப்பில் உள்ள மேலுஞ்சில அறைகூவலான சிக்கல்கள் (1980) ஆகிய நூல்களை எழுதினார். மேலும் “நடப்புக் கரிம வேதியியல் சுருக்கக் குறிப்புகள்” இதழின் பதிப்பிலும் ஈடுபட்டார். இவர் உதவித் தொகைகளைப் பெற்று, அதன் அடிப்படையில் கான்பூரில் தனது ஆய்வைத் தொடர்ந்தார். அவரது கணவர் அங்கே பணியில் இருந்ததால் எழுதப்படாத நடைமுறை விதியால் புலப்பணியாளராக இவரால் சேர இயலவில்லை. இவர் 1993ல் திருவனந்தபுரத்தில் உள்ள அறிவியல் தொழில்நுட்பத் துறையிடை ஆய்வுக்கான தேசிய நிறுவனத்தின் மண்டல ஆய்வகத்திலும் 1998ல் ஐதராபாதில் உள்ள இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்திலும் தன் ஆய்வைத் தொடர்ந்தார். அங்கே இவர் இணை இயக்குநர் ஆனார்.

தர்சன் அரங்கநாதன் உயிர்க்கரிம வேதியியலில் பெரும்பணி ஆற்றியுள்ளார். இதில் “புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக” மிகவும் பெயர்பெற்றார். இவர் “மீமூலக்கூறு தொகுப்பு, மூலக்கூறு வடிவமைப்பு, அரிய உயிரியல் நிகழ்வுகளின் வேதியியல் ஒப்புருவாக்கம், செயல்முனைவுக் கலப்பு பெப்டைடுகளின் தொகுப்பு, மீநுண்குழல்களின் தொகுப்பு ஆகிய ஆய்வுகளுக்காகப் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவர் இசபெல்ல கார்பேவுடன் இணைந்து அமெரிக்கக் கப்பல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் கூட்டாகப் பணிபுரிந்தார். இவரது சிறப்பார்வம் இயற்கை உயிர்வேதி நிகழ்வுகளை ஆய்வகத்தில் மீட்டுருவாக்குவதி குவிந்திருந்தது. ஃஇஸ்ட்டாமைன், ஃஇஸ்ட்டாடைன் ஆகியவற்றில் இருந்து, அவற்றின் ஓர் உட்கூறான இமிடசோலைத் தன்னியக்கமுறையில் பிரித்தெடுப்பதற்கான நெறிமுறையை உருவாக்கினார். இது மருந்தாக்கத்துக்குப் பெரும்பங்காற்றியது. இவர் யூரியா சுழற்சியை ஆய்வகத்தில் ஒப்புருவாக்கம் செய்யும் வழிமுறையை உருவக்கினார். இவர் பின்னாட்களில் பல்வேறு புரதங்களைச் செய்வதிலும் தானே ஒருங்கிணையும் பெப்டைடுகளைக் கொண்டு மீநுண்குழல்களை உருவாக்குவதிலும் வல்லவரானார்.

புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் ஜூன் 4, 2001ல் மார்பகப் புற்றால் தனது 60வது அகவையில் தன் பிறந்த நாளன்று இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது கணவர், இவரின் நினைவாக, 2001ல் ஆண்டுக்கு இருமுறை அமைந்த விரிவுரைகளைப் பேராசிரியர் தர்சன் அரங்கநாதன் நினைவு விரிவுரை எனும் பெயரில் உருவாக்கினர். இதில் அறிவியல் தொழில்நுட்பத்தில் பெயர்பெற்ற பெண் அறிவியலாளர்கள் விரிவுரையாற்ற அழைக்கப்படுவர்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *