தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நீட்” தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும் அதனை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார்.
இதன் தொடர்ச்சியாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து முதலமைச்சரின் கடிதத்தையும் – “நீட்” தேர்வு குறித்து தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் அளித்த பரிந்துரைகளையும் இணைத்து வழங்கினார். இந்த சந்திப்பின்போது தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், கேரள மாநில தி.மு.க. அமைப்பாளர் முருகேசன் மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.