• Fri. Mar 29th, 2024

உலக அளவில் முதன்முறையாக 12வயது சிறுமிக்கு திசுக்கட்டி அகற்றம்.. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை..!

உலகளவில் முதல் முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 12 வயது பெண் குழந்தைக்கு வலது அட்ரீனல் சுரப்பியின் மிகப்பெரிய “பியோக்ரோமோசைட்டோமா” லேப்ராஸ்கோபி மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், வலது அட்ரீனல் சுரப்பியில் இருந்த மிகப்பெரிய பியோக்ரோமோசைட்டோமா என்னும் திசுக்கட்டியை அகற்றுவதற்கு லேப்ராஸ்கோபிக் செயல்முறையை சமீபத்தில் வெற்றிகரமாக நிகழ்த்தி சாதனை படைத்திருக்கிறது. ஊடுருவல் அறுவைசிகிச்சை செயல்முறையான இது, “லேப்ராஸ்கோபிக் அட்ரினாலெக்டமி” என அறியப்படுகிறது. தென்காசியை சேர்ந்த 12 வயதான ஒரு சிறுமிக்கு அவளது வலது அட்ரீனல் சுரப்பியில் 14ழூ10 செ.மீ. அளவுள்ள திசுக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டதால், அதற்கு சிகிச்சையளிக்க இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.


மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் குடல், இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் தலைவர் டாக்டர். ரமேஷ் அர்த்தனாரி இது குறித்து கூறியதாவது: “14 x10 செ.மீ. அளவுடன் அட்ரீனல் சுரப்பியில் இருந்த ஒரு மிகப்பெரிய பியோக்ரோமோசைட்டோமாவை அகற்றுவதற்கு லேப்ராஸ்கோபிக் அட்ரினாலெக்டமி என்ற இந்த சிகிச்சை செயல்முறையை இந்தியாவிலோ அல்லது உலகளவில் வேறு எங்குமோ, தெரிந்தவரையில் யாரும் இதுவரை மேற்கொண்டதில்லை. நோயாளிகளின் வயதை கருத்தில் கொண்டு அதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.


முகிலா என்ற இந்த சிறுமிக்கு செய்யப்பட்ட இந்த லேப்ராஸ்கோபிக் அறுவைசிகிச்சை செயல்முறை பற்றி பேசும்போது மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள், தங்களது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கக்கூடிய நிகழ்வு இது என்று குறிப்பிட்டனர். கட்டியின் அளவு மிகப்பெரியதாக இருந்தால் மற்றும் நோயாளி அதிக உடற்பருமன் கொண்டவராக இருந்தால், லேப்ராஸ்கோபிக் முறையில் அதை அகற்றுவது என்பது ஒரு சரியான அணுகுமுறையாக இருப்பதில்லை. 6 செ.மீ.-க்கும் அதிகமான அளவுள்ள கட்டிகளுக்கு வழக்கமாக செய்யப்படும் திறந்தநிலை அட்ரினாலெக்டமி முறையே சிறந்த சிகிச்சை தேர்வாக இருக்கிறது. ஆனால் இந்த நோயாளியின் எடை 76 கிலோ என மிக அதிகமாக இருந்ததோடு, கட்டியின் அளவும் 14×10 செ.மீ. என்பதாக இருந்ததால், இந்த சூழலில் லேப்ராஸ்கோபிக் முறையில் அட்ரீனல் சுரப்பியிலிருந்த கட்டியை அகற்றும் சிகிச்சைமுறை செய்யப்பட்டது இதன் தனித்துவத்தை இன்னும் உயர்த்தியிருக்கிறது.


பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்களின் ஒருங்கிணைப்போடு இந்த துல்லியமான சிகிச்சை திட்டம் வகுக்கப்பட்டது. இக்குழுவில் டாக்டர். ரமேஷ் அர்த்தனாரி (தலைவர், குடல், இரைப்பை அறுவைசிகிச்சை துறை), டாக்டர். என் மோகன் (முதுநிலை நிபுணர், குடல், இரைப்பை அறுவைசிகிச்சை துறை), டாக்டர். ஸ்ரீனிவாசன் ராமசந்திரன் (முதுநிலை நிபுணர், குடல், இரைப்பை அறுவைசிகிச்சை துறை), டாக்டர். ஜெகதீஷ் சந்திரபோஸ் (முதுநிலை நிபுணர், குடல், இரைப்பை அறுவைசிகிச்சை துறை), டாக்டர். என். மகாராஜன் (முதுநிலை நிபுணர், மயக்கவியல் துறை) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களது அனுபவமும், செயல்திறனும் ஒருங்கிணைந்து, இந்த நோயாளிக்கு சிறப்பான சிகிச்சை பலனை பெற்றுத் தருவதற்கு ஏதுவாக்கியிருக்கிறது. இச்சிறுமி இப்போது முழுமையாக பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார். மேலும் இயல்பான தினசரி நடவடிக்கைகளை இப்போது இச்சிறுமியால் செய்ய முடிகிறது என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *