பிஃபா உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியா அணி பிரேசிலை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதனால் உலகக்கோப்பை தொடர் மீதான சுவாரஸ்யம் அடுத்தக் கட்டத்தை எட்டியது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது காலிறுதி போட்டியில் வலிமையான அர்ஜென்டினா அணியை எதிர்த்து தடுப்பாட்டத்தில் அசத்தி வரும் நெதர்லாந்து அணி மோதியது.
இந்த ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் நிதானமாக விளையாடினர். முதல் 15 நிமிடங்களில் அர்ஜென்டினா அணி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் பந்தை வைத்திருந்த நிலையில், நெதர்லாந்து அணி அடுத்த சில நிமிடங்களில் ஆட்டத்திற்குள் வந்தது. இரு அணி வீரர்களும், எதிரணியின் தடுப்பாட்டத்தை தகர்க்க முடியாமல் திணறினர்.
ஆனால் 35வது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த மேஜிக் பாஸை, அர்ஜென்டினா அணியின் இளம் வீரர் மொலினா கோலாக மாற்றினார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் அர்ஜென்டினா அணியின் ஆதிக்கம் தொடங்கியது. இதனிடையே முதல் பாதி ஆட்டம், அர்ஜென்டினா அணியின் முன்னிலையுடன் முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது முதலே மெஸ்ஸி தனியொரு வீரனாக அட்டாக்கை முன்னெடுத்தார். தொடர்ந்து 55வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பில், நட்சத்திர வீரர் மெஸ்ஸி சில செ.மீ தூரத்தில் கோலை தவறவிட்டார். ஆனால் 73வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர்கள் அர்ஜென்டினா அணியின் அகுனாவை ஃபவுல் செய்தனர். இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி பயன்படுத்த தயாரானபோது, கடந்த போட்டிகளில் அவர் தவறவிட்டது காட்சிகள் நினைவுக்கு வந்தன. ஆனால் அதனையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் நிதானமாக பெனால்டியில் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் மெஸ்ஸி 4வது கோலை அடித்தார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 2-0 என்று முன்னிலை பெற்றது.
அதன் பின்னர் நெதர்லாந்து வீரர்களின் அட்டாக் வேறு மாதிரி மாறியது. மெஸ்ஸியையும், அர்ஜென்டினா வீரர்களுடனும் நேரடியாக தாக்க தொடங்கினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகரித்தது. இதனை பயன்படுத்தி கர்ல்ஸ் கொடுத்த கிராஸை, வெக்கோர்ஸ்ட் நெதர்லாந்து அணிக்காக முதல் கோல் அடித்தார். தொடர்ந்து இரண்டாம் பாதியில் 10 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.
அதில் நெதர்லாந்து அணி தொடர்ந்து அட்டாக் மேக் அட்டாக் செய்ய, கடைசி நிமிடத்தில் ஃபிரி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனை சிறப்பாக பயன்படுத்தி, மீண்டும் வெக்கோர்ஸ்ட் கோல் அடித்து ஆட்டத்தில் சமநிலை ஏற்படுத்தினார். இரு அணிகளும் தலா 2 அடித்ததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.