தோவாளை தாலுகா அலுவலகத்தில் இ-சேவை மையத்தில் ஆதார் கார்டில் செல்போன் நம்பரை சேர்ப்பதற்காக குடும்பத்தினருடன் வந்த போது பழைய ஆற்றில் தவறி விழுந்து மூன்றாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அமைந்துள்ள தோவாளை தாலுகா அலுவலகத்திற்கு ஆரல்வாய்மொழி பகுதியைச் சார்ந்த தேவசுதன் (வயது 40) அவரது மனைவி சீதாலட்சுமி (வயது 33) உட்பட இவர்களது மகன் தங்க சுகின் (வயது 8) மூன்றாம் வகுப்பு மாணவன், மகள் தனுவர்ஷினி (வயது 4) இவர்கள் குடும்பத்துடன் பூதப்பாண்டியில் அமைந்துள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் இ-சேவை மையத்தில் ஆதார் கார்டில் செல்போன் நம்பர் சேர்ப்பதற்காக வந்துள்ளனர்.
இந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக அருகிலுள்ள பழையாறு பகுதிக்கு அனைவரும் சென்றுள்ளனர். பின்னர் கணவன் மனைவி இருவரும் தாலுகா அலுவலகத்திற்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு பழையாற்றின் கரையில் சென்று பார்த்தபோது மகன் ஆற்று தண்ணீரில் மூழ்கி மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மகனை மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தங்க சுகின் தலையில் அடிபட்டு ஆற்றுவெள்ளம் குடித்ததால் மூச்சுத்திணறி ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை ஆய்வுக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் தோவாளை தாலுகா அலுவலக ஊழியர்களும், பொதுமக்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.