• Tue. Apr 22nd, 2025

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருவிழா..,

ByKalamegam Viswanathan

Apr 11, 2025

பங்குனி உத்திரம் முன்னிட்டு அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாளாக எல்லோராலும் போற்றப்பட்டு, முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இன்று அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பங்குனி உத்திரம் முன்னிட்டும் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் காவடி சுமந்தும் பால்குடம் ஏந்தியும் கிரிவலம் வந்து அவர்கள் கொண்டு வந்த பால் மூலம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து காலை ஐந்து மணி முதல் வழிபாட்டிற்காக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பரங்குன்றம்,மதுரை திருமங்கலம், சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யக்கூடிய சூழல் உருவானது.

பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது.