• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

“குடிக்க தண்ணீர் இல்ல.., நடந்துபோக ரோடும் இல்ல”.., தவிக்கும் பர்கூர் உக்கிராம மக்கள்… கண்டுகொள்வாரா ஈரோடு கலெக்டர்!

“எமர்ஜென்சின்னா.., அது இரவா இருந்தாலும் சரி, பகலா இருந்தாலும் சரி வண்டியை
பிடித்து தான் செல்ல வேண்டும். நாங்க இருக்குறது குடிசை வீடுகள்தான், அதுல மண்சுவர்ல தான் கட்டியிருக்கும். திடீர்னு மழை வந்தா இடிந்சு விழுந்துரும்” என்ற வேதனையான கிராமம் இருக்கா என்றால்? இன்னமும் இருக்கிறது என்ற பதிலை நாம் சொல்ல முடியும். எங்கே இருக்கின்றது அந்த கிராமம் அதுவும் அடிப்படை வசதியே இல்லாம இருக்கின்றதா? என்ற கேள்வியை நீங்கள் எழுப்புவதற்குள்ளேய நாங்களே சொல்கிறோம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலையில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மலைவாழ் மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா என்கிற எதிர்பார்ப்பில் அக்கிராம மக்கள் தற்போது வரை இருந்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது.


பர்கூர் மலையை பொறுத்தவரை மேற்கு மலை, கிழக்கு மலை என இரு பிரிவுகளாக இருந்தாலும், மேற்கு மலை 16-கிராமங்களும், கிழக்கு மலை 18-கிராமங்களும் என மொத்தமாக 34- கிராமங்கள் அமைந்துள்ளது. மொத்தம் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ள பர்கூர் மலை, கடல் மட்டத்திலிருந்து 1152 அடி உயரத்தில் இருக்கின்றது. பர்கூர் மலைக்குட்பட்ட ஓசூர் குக்கிராமம், கொங்காடை கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மேட்டுப்பகுதியில் 25-க்கு மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதியின்றி தவியாய் தவிப்பதுதான் வேதனைக்குரிய ஒன்று. இங்குள்ள மக்கள் தண்ணீருக்காக தினமும் 1 கிலோ மீட்டர் நடந்துசென்று எடுத்து வரும் சூழ்நிலையில் உள்ளார்கள். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட போர்வெல் இன்னும் சரி செய்யப்படவில்லை, தினமும் நடந்தே சென்று தண்ணீர் எடுத்து வரும் பரிதாப நிலையில்
இருந்து வருகின்றனர்.

இது பற்றி ஓசூர் குக்கிராமத்தை சேர்ந்த மாதையன் நம்மிடம்..,

“நாங்கள் இந்தப் பகுதியில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருகிறோம். அடிப்படை
தேவையான வீடு, ரோடு, குடிநீர், மின்சாரம் பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் தினமும் குடிநீருக்காக ஒரு கிலோமீட்டர் கரடு, முரடான பாதையில் ஒரு கையில் குழந்தை, மறுகையில் தண்ணீரும் எடுத்து வரும் சூழ்நிலை உள்ளது. ஆண்கள் வீட்டில் இருந்தால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வோம். பெண்கள் தண்ணீர் எடுக்க சென்று வருவார்கள். குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த பகுதி ஆண்கள் அனைவரும் விவசாய கூலி வேலைக்கு சென்று வருவதால், வீட்டில் இருக்கும் குழந்தையை சுமந்து கொண்டு பெண்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர். அதுபோக பாதையும் சரிவர இல்லை, கரடுமுரடாக உள்ளது” என்றார் வேதனையுடன்.
மேலும் இதைத் தொடர்ந்து ஓசூர் குக்கிராமத்தைச் சேர்ந்த மாதி..,

“அடிப்படை வசதிகள் இல்லாத கிராமம் ன்னு சொல்ல முடியாது. அடிப்படை வசதிகள் எல்லாம் இருந்துச்சு. நாங்கள் குடியிருக்கும் பகுதி மலைப்பிரதேசம். மழை அதிகமா பெய்றதனால் ரோடு குண்டும், குழியுமாக மாறிகிறது. குடி தண்ணீர் பிரச்சனை இங்கு தாண்டவம் ஆடுது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல இருக்கு. இதை சரிபண்ணுங்கன்னு தான் நாங்க இப்ப மனவேதனையோடு போராடிகிறோம். மேலே சொன்னது போல, நாங்க போராட ஆரம்பிச்ச உடனே.., பெயருக்காக திடீர் விசிட்-ன்னு அதிகாரிக கிராமத்துக்குள நுழைஞ்சு ஆய்வு பண்ண மாதிரி நடிச்சுட்டு போவாங்க. பின்னர் பெயர் சொல்லற விதமா இல்லமா ஏனோ-தானோ.., ரோடும் போடுவாங்க அந்த ரோடு இரண்டு மழையில மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்ற வசனத்திற்கு ஏற்ற மாதிரி பல்லை இழிச்சுகிட்டு நிக்கும். நாங்க அரசாங்கத்த குறை சொல்லலை. செய்றத திருந்த செய்ங்கனு சொல்றோம். இந்த ரோடு பிரச்சனையில் குடிக்க தண்ணீர் கூட எடுக்க போக முடியல. மாலை 5 மணிக்கு மேல யாணைகள் தொந்தரவு இருக்குறதனால திடீர்னு ஆஸ்பத்திரிக்க கூட போக முடியல. ஆஸ்பத்திரி இருந்தா தானே போறதக்கு. காலையில 10 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு ஒரு டாக்டர் வருவாரு. அவரும் நினைச்ச வருவாரு. நினைச்ச போயிருவாரு.

எமர்ஜென்சின்னா அது இரவா இருந்தாலும் சரி, பகலானாலும் சரி வண்டியை பிடித்து தாமரைக்கரை செல்ல வேண்டும். நாங்க இருக்குறது குடிசை வீடுதான், அது மண்சுவர் தான் கட்டிருக்கும். திடீர்னு இடிந்து விழுந்துரும். எங்க கோரிக்கை எல்லாம் பர்கூர் மலைக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் வேண்டும். எங்கள் அனைவருக்கும் அரசு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்” என்றார் வேதனை மல்க.
இது பற்றி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன்உன்னியிடம் நாம் பேசினோம்..,

“ஓசூர் கிராமத்தில் போடப்பட்ட போர்வெல்லின் தண்ணீர் அளவு கீழே சென்று
விட்டதால் அதை பயன்படுத்த முடியவில்லை. அடுத்த ஆண்டு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், இந்த பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது. ஓசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 3-செவிலியர்கள் நியமனம் செய்து பிரசவம் உட்பட, மருத்துவ வசதிகள் கிடைக்கவும், சுகாதார நிலையத்துக்கு பின் பகுதியில் மருத்துவர்கள் தங்க கூடுதல் கட்டடிடம் கட்டப்பட்டு வருகிறது.
மேலும் மழையால் சேதமடைந்த ரோட்டினை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார் பொறுப்பாக.

எது எப்படியோ மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை இந்த அரசு செய்து கொடுத்தால் நல்லது.