• Tue. Apr 16th, 2024

சட்டச் சிக்கல் உள்ளது… தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம்..!

ByA.Tamilselvan

Sep 24, 2022

“பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் சட்டச் சிக்கல் உள்ளது” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்துவதற்கான சட்ட மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அந்த மசோதாவில், சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தின் வேந்தராக தமிழக முதல்வர் இருப்பார் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், துணைவேந்தர் நியமனத்தை தமிழக அரசே செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசுக்கு சில கேள்விகளை எழுப்பி ஆளுநர் கடிதம் அனுப்பி இருந்தார். தற்போது, தமிழக அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் சட்டச் சிக்கல் இருப்பதாக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “கல்வி பொதுப் பட்டியலில் உள்ளதால், அரசியல் சாசன ஆலோசனைகளை பெற்ற பிறகே முடிவு எடுக்க முடியும். இதில் சட்டச் சிக்கல் உள்ளது. பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடம் இல்லை. பல்கலைக் கழகங்களில் தரமான கல்வியை அளிப்பதில் ஆளுநருக்கு முக்கிய பொறுப்பு உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *