• Thu. Mar 28th, 2024

தில்லை நாதரின் சிதம்பர ரகசியம் அறிவோம்..!!

Byகாயத்ரி

Sep 24, 2022

சிதம்பரம் முதலில் தில்லை வனங்கள் சூழ்ந்த காடாய் இருந்தது. பல காலத்துக்கு முன்னர் வேத காலத்திலேயே, அதற்கும் முன்னே எப்போது என்று சொல்ல முடியாத தொன்மையான காலத்திலே அது தில்லைக் காடாக இருந்தது. “தில்லை” என்ற இந்தப் பெயர் மிகப் பழமையான ஒன்று எனப் புராணங்களின் வாயிலாகத் தெரிய வருகிறது. சரித்திர ஆராய்ச்சியாளர்களின் முடிவின் படியும் இது தில்லை வனங்கள் சூழ்ந்து இருப்பதால் “தில்லை” எனப் பெயர் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ‘ பூலோக கைலாசம்’ என்றும், ‘கைலாயம்’ என்றும் சொல்லப்படுவது உண்டு. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாகவும், தில்லை என்கின்ற பெயரில் முன்னோர்களால் அழைக்கப்பட்டதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இக்கோயில் சைவ இலக்கியங்களில் கோயில் என்கிற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதி என்று கூறப்படுகிறது. பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

நடராஜர் சன்னதிக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் அமைந்துள்ளது. சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் ஒரு சிறிய வாயில் உள்ளது. இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. பொன்னாலான வில்வ மாலை சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்கள் பார்வைக்கு காண்பிக்கப்படுகிறது. பரிபூரணமான வெட்டவெளியே சிதம்பர ரகசியம் ஆகும். சிதம்பர ரகசிய பீடத்தின் வாயிலில் உள்ள திரை அகற்றப்பட்டு ஆரத்தி காட்டப்படும்போது சிலையோ வேறு காட்சிகளோ தென்படாது. மாறாக தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ தளமாலை ஒன்று தொங்கும் காட்சி மட்டுமே தெரியும். இதற்குள் வேறு திருவுருவம் ஏதும் தோன்றாது. ஆகாய உருவத்தில் இறைவன் மூர்த்தி ஒன்றும் இல்லாமல் வில்வ தளம் தொங்குவதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் முடிவும், முதலும் இல்லாமல் இருக்கின்றார் என்பது தான்.

ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. வெட்ட வெளியில் அவனை உணர மட்டுமே முடியும் என்பது இதன் முழு அர்த்தம். இந்த சிதம்பர ரகசியத்தை வேண்டி கொண்டு ஒருவன் தரிசித்தால் நினைத்தபடி நினைத்த பலன் கிடைக்கும். ஆனால் எவ்வித பலனையும் சிந்திக்காமல் தரிசித்தால் ஜென்ம விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனை தான் பார்த்தாலே முக்தி தரும் தில்லை என்று பக்தர்கள் சொல்கின்றனர்.இதுவே சிதம்பர ரகசியம் என்று கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *