• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

​”துரோகி வேலுமணி” – பொதுவெளியில் வெடித்த தொண்டர்களின் ஆக்ரோஷம்..,

BySeenu

Jun 2, 2026

​ தமிழக அரசியலின் கொண்ட கொங்கு கோட்டையான கோவையில், அ.தி.மு.க-வின் “இரட்டைத் தூண்கள்” என்று வர்ணிக்கப்படும் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகிய இருவருக்கும் இடையே அசைக்க முடியாத கடுமையான உள்கட்சி விரிசல் விழுந்து இருப்பது இன்று பொதுவெளியில் அம்பலமாகி உள்ளது.

கோவையில் நடைபெற்ற துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை, அங்கு இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அ.தி.மு.க தொண்டர்கள் “துரோகி” என முழக்கமிட்டுப் புறக்கணித்த சம்பவமும், அவரை எடப்பாடி பழனிசாமி அடியோடு ஓரம் கட்டிய நிகழ்வும் தமிழக அரசியல் அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

​அ.தி.மு.க-வின் மூத்த தலைவரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் கடந்த மே மாதம் 15-ஆம் தேதி வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். இதனையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறுவதற்காக அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி (EPS) இன்று பொள்ளாச்சிக்கு வருகை தந்தார்.

​அவருக்கு முன்னதாகவே, அ.தி.மு.க-வின் கொங்கு மண்டல தளபதியும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான எஸ்.பி வேலுமணி பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தார். சமீபத்தில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சிக்குச் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு தெரிவிப்பதாக எஸ்.பி வேலுமணி எடுத்த தனிப்பட்ட நிலைப்பாடு, அ.தி.மு.க தலைமைக்குக் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

வேலுமணியின் இந்த அதிரடி மாற்றம் அ.தி.மு.க-வை மீண்டும் இரண்டாகப் பிளக்கும் எனத் தொண்டர்கள் இடையே கடும் அதிருப்தி நிலவி வந்தது.

​”துரோகி வேலுமணி” – பொதுவெளியில் வெடித்த தொண்டர்களின் ஆக்ரோஷம்:

​இன்று பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டின் முன்பு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அ.தி.மு.க தொண்டர்கள் ஒரு திரண்டு இருந்தனர். அப்போது அங்கு நின்று இருந்த எஸ்.பி வேலுமணியைப் பார்த்த தொண்டர்கள், கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, பொதுவெளியில் அவரை “துரோகி… துரோகி…” என ஆக்ரோஷமாக முழக்கமிட்டு அடையாளப்படுத்தினர்.

​இதனால் அதிர்ச்சி அடைந்த எஸ்.பி வேலுமணி, தொண்டர்களின் இந்தச் செயலுக்குப் பொது இடத்திலேயே தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து, தனது ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கோவை ஏர்போர்ட்டில் இ.பி.எஸ்-ஸிற்குத் தொண்டர்கள் எழுப்பிய “காசுக்கு விலை போக மாட்டோம்” என்ற கோஷத்தின் அசல் பின்னணி இது தான் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

​வேலுமணியை அடியோடு புறக்கணித்த இ.பி.எஸ்:

​இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி ஜெயராமன் தாயாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். எப்போதும் எஸ்.பி வேலுமணியும், எடப்பாடி பழனிசாமியும் அனைத்து அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் இரட்டையர்களாகவே வலம் வருவது வழக்கம். ஆனால், இன்றைய அஞ்சலி கூட்டத்தில் எஸ்.பி வேலுமணி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார்.

​பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டின் ஒரே அறைக்குள் எடப்பாடி பழனிசாமியும், எஸ்.பி வேலுமணியும் அருகருகே இருந்தும் கூட, எடப்பாடி பழனிசாமி அவரைத் திரும்பிப் பார்க்காமல் முற்றிலுமாக ஓரம் கட்டினார். எஸ்.பி வேலுமணி முதன்மைப்படுத்தப்படாமல், எடப்பாடியின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுக்குப் பின்னால் சாதாரணத் தொண்டரைப் போல ஓரம் தள்ளப்பட்டு நின்றது அங்கு கூடியிருந்த சீனியர் அ.தி.மு.க தலைவர்களையே ‘அப்செட்’ ஆக்கி உள்ளது.

​செய்தியாளர்கள் கேமரா உடைக்க முயற்சி – போர்க்களமாக மாறிய பொள்ளாச்சி:

​வெளியே தொண்டர்கள் எஸ்.பி வேலுமணிக்கு எதிராகக் கூச்சலிட்டுப் பதற்றத்தை ஏற்படுத்தியதை அங்கு நின்று இருந்த ஊடகச் செய்தியாளர்கள் தங்களது கேமராக்களில் “லைவ்” ஆக ஒளிப்பதிவு செய்ய முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த வேலுமணியின் ஆதரவாளர்கள் மற்றும் சில அ.தி.மு.க வினர், செய்தியாளர்களை அக்குவேறாகத் தடுத்து நிறுத்தி, அவர்களின் கேமராக்களைப் பறித்து உடைக்க முயன்றனர்.

​இதனால் செய்தியாளர்களுக்கும், கட்சியினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

​அ.தி.மு.க ஏற்கனவே ஓ.பி.எஸ், டி.டி.வி எனப் பிரிந்து கிடக்கும் நிலையில், தற்பொழுது கட்சியின் தூணாகக் கருதப்படும் எஸ்.பி வேலுமணியே எடப்பாடி பழனிசாமியால் பகிரங்கமாகப் புறக்கணிக்கப்பட்டு இருப்பது, அ.தி.மு.க-வுக்குள் அடுத்த “உள்நாட்டுப் போரை” அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைத்து உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.