• Sun. Mar 16th, 2025

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 9 முதல் தெப்பத்திருவிழா

ByP.Kavitha Kumar

Feb 18, 2025

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இவ்விழா கடந்த 1468-ம் ஆண்டு முதல் அப்போதைய அரசரான சாளுவ நரசிம்ம ராயர் தொடங்கி வைத்ததாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. அப்போது, இவ்விழாவினை தமிழில் ’திருப்பள்ளி ஓடைத்திருநாள்’ என்று அழைத்தனர். இதனை தெலுங்கில் ‘தெப்பத் திருநாள்ளு’ என அழைக்கின்றனர். இவ்விழாவினை அன்னமாச்சாரியார் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் கொண்டாடினால் நன்றாக இருக்கும் என கூறியதால், அப்போதிலிருந்து இவ்விழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா மார்ச் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழா தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடைபெறும். முதல் நாளான 9-ம் தேதி சுவாமி புஷ்கரணியில் உள்ள அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் எழுந்தருளி மூன்று சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். மார்ச் 10-ம் தேதி ருக்மிணி, ஸ்ரீகிருஷ்ணர் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். மார்ச் 11-ம் தேதி உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி மூன்று சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 12-ம் தேதி உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி ஐந்து சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

ஐந்தாவது நாளான மார்ச் 13-ம் தேதி உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி ஏழு சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இந்த திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்ச் 11, 12 மற்றும் 13-ம் தேதிகளில் பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.