கடவுள் எதுக்கு கும்புடணும்….கடவுள் கும்புடக் கூடாது; கடவுள் ‘அவுகள’ ‘…பாத்து கும்புடணும்; ….கடவுள நான் கும்புட மாட்டேன்” என, நகைச்சுவை உணர்வோடு, தேனி அல்லிநகரம் நகராட்சியில் ‘களம்’ காணும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை, பிரசார மேடையில் அறிமுகம் செய்து வைத்து, அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
வரும் 19 ல், தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளில் கவுன்சிலர் பதவிக்கு களம் காணும் தி.மு.க.,- அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் நேற்று (பிப்.,10) மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மற்றும் அறிமுகம் செய்து வைத்து போடி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் ஐ.பெரியசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தேனியில் இரவு 7 மணிக்கு மேல், பங்களா மேடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடைக்கு வருகை தந்த, அமைச்சர் ஐ. பெரியசாமி, தேனி அல்லிநகரம் நகராட்சியில் 20வது வார்டில் போட்டியிடும் பாலமுருகன். 10வது வார்டில் போட்டியிடும் அவரது மனைவி ரேணுப் பிரியா உள்ளிட்ட 33 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது: தலைவர் மு.க., ஸ்டாலின் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் கிட்டத்தட்ட, ஆட்சிப் பொறுப்பேற்ற எட்டு மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் 2.761 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட மக்கள் வசதிக்காக, நவீன அரிசி ஆலை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மாவட்ட நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம், புது பேரூந்து நிலையம் போன்ற வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றினால், விரைவில் மாநகராட்சி அந்தஸ்து பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, வார்டு வாரியாக போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரை ‘மைக்’ மூலம் அழைத்து அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, கடைசி கட்டமாக 33வது வார்டு வேட்பாளர், கடவுள் (பெயர்) கை கூப்பியடி நின்றிருந்தார். அவரைப் பார்த்த அமைச்சர்,” கடவுள் எதுக்கு கும்பிடணும்; கடவுள் கும்பிடக் கூடாது; கடவுள் ‘அவுகள’ பாத்து கும்பிடணும்….நான் கடவுள கும்பிட மாட்டேன்” என, நகைச்சுவை உணர்வுடன் பேசி முடித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த கட்சித் தொண்டர்கள் மத்தியில்
‘கை’ தட்டல் பலமாக எழுந்தது.
முன்னதாக, தேனி அல்லிநகரம் அம்பேத்கர் திடலில் நடந்த நிகழ்ச்சியில் 1-17 வரை வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். தொடர்ந்து பங்களா மேடு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் 18-33 வரை வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

