தேனி அரசு மருத்வக்கல்லூரியில் முத்தமிழ் மன்ற விழா அதிரல் 22-ல் பாடல், நடனம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரியில் நேற்று அதிரல் 22 முத்தமிழ் மன்ற விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் முரளீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார். இந்த விழாவில் பேராசிரியர் ஞானசம்பந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் பறை இசை, நடனம், வினோத அரங்கு, பாடல், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் தமிழினி துணைவன் குழுவை கௌரவிக்கும் வகையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி, திருச்சி மருத்துவக்கல்லூரி நிறுவுனர் சுபாஷ் காந்தி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி, செவிலியர் கல்லூரி இணை நிறுவனர் உமா மகேஸ்வரி திருவேங்கடம் உள்ளிட்ட ஏராளமான மருத்துவர்களுக்கு, ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் முரளீதரன் பேசுகையில், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் வார்த்தைக்கு அர்த்தமாக மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர். மருத்துவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் அவர்கள் மருத்துவ பணியை செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
பின்னர் கலைமாமணி பேராசிரியர் ஞானசம்பந்தன் நடுவராகவும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது. மகிழ்ச்சியான கனாக்காலம் பள்ளி வாழ்க்கையா? கல்லூரி வாழ்க்கையா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இற்த பட்டிமன்றத்தின் முடிவில் கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் கண்ணன் போஜராஜ், துணை முதல்வர் எழிலரசன் ,நிலைய மருத்துவ அலுவலர் சந்திரா, துணை நிலைய மருத்துவ அலுவலர் ஈஸ்வரன்;, மணிமொழி மாணவர் மன்ற அறிவுரைஞர் சாந்திராணி, முத்தமிழ் மன்ற செயலாளர்கள் ஹரிகரன், ப்ரீத்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.