ஆதம்பாக்கத்தில்பச்சையம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்து தங்க தாலிக் கொடியை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் ரோடு, ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ளது பச்சையம்மன் கோவில். தனியாருக்கு சொந்தமான இக்கோவிலை வண்டிக்காரன் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் அவரது மனைவி சாந்தி ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

தமிழ்ச்செல்வர் மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டி சென்றவர் நேற்று காலை வந்து பார்த்தபோது, கோவில் சன்னதி கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு கிராம் தாலிக்கொடி திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக பார்த்தபோது, ஆதம்பாக்கம், கக்கன்நகரை சேர்ந்த ரெபெல் (வயது-30) என்பதும் அவர் ஏ.சி. மெக்கானிக் என்பதும் தெரிய வந்தது.
அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் திருடியது உறுதியானது. இதையடுத்து, அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.