


அவசர கால பயன்பாட்டு அனுமதியை பெற்றிருந்த பைசர் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் முழுமையான அனுமதியை வழங்கி இருக்கிறது.
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனி பயோன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டது.

அதே போல மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவன தடுப்பூசிகளுக்கும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழக அவசரகால அனுமதியை வழங்கியது.
இதையடுத்து இந்த 3 தடுப்பூசிகளும் அமெரிக்க மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் பைசர் தடுப்பூசிக்கு அமெரிக்கா முழு ஒப்புதலை வழங்கி இருக்கிறது. இதுவரை அவசர கால பயன்பாட்டு அனுமதியை பெற்றிருந்த பைசர் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் முழுமையான அனுமதியை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் அந்த தடுப்பூசி மீதான நம்பிக்கை மக்களிடம் உயரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா, “பைசர் தடுப்பூசியை முழுமையாக அங்கீகரித்த முதல் நாடு அமெரிக்கா ஆகும். தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகரிக்க இந்த முடிவு உதவும். ஏனென்றால் தடுப்பூசி உயிர்களை பாதுகாக்க உதவும் சிறந்த கருவியாகும்” என்றார்.
பைசர் தடுப்பூசிக்கு முழு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதையடுத்து அதன் உற்பத்தி அதிகரிக்கும். பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் அதிக தடுப்பூசி ஆர்டர்களை பெறுவது அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கமிஷனர் ஜேனட் வூட்காக், “இந்த தடுப்பூசி பாதுகாப்பு செயல்திறன் மற்றும் உற்பத்தி தரத்திற்கான உயர் தரப்பைப் பெற்றுள்ளது. இதனால் பொதுமக்களிடம் மிகுந்த நம்பிக்கை ஏற்படும். இதன் மூலம் அமெரிக்காவில் தொற்று நோயின் போக்கை குறைக்க மேலும் உதவிகரமாக இருக்கும்” என்றார்.

