
முதிரப்புழா, நல்லதண்ணி, குண்டளை ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிப்பதால், மூணாறு என பெயர் பெற்ற இந்த சுற்றுலாத்தலம், தென்னகத்து காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் அமைத்துள்ள இந்த நகரம், காலனி ஆட்சியின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோடை ஓய்விடமாக இருந்தது.
மூணாறு சுற்றுலா தலம் மட்டுமல்ல, பல கதைகளையும், வரலாற்றையும், கலாச்சாரத்தையும் தன்னகத்தே கொண்டு வாழும் அருங்காட்சியகமக உள்ளது. மூணாறின் சரித்திரத்தில் எழுதப்படாத பல கதைகள் உள்ளன. பனி மூடிய மலைகளுக்கு அடியிலும், தேயிலைத் தோட்டங்களின் பசுமைக்குள்ளும், காலனித்துவ காலத்தின் பல நினைவுகள் புதைந்து கிடக்கின்றன. சில கதைகள் வாய்மொழி வழியே பரவி ஐதீகங்களாக மாறுகின்றன, சில வரலாற்றுப் பதிவுகளில் இடம்பெறுகின்றன.
மூணாறின் இதமான தென்றல் காற்றுடன் அரபிக்கடலின் சுழன்றடிக்கும் காற்றும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் மூணாறின் தாஜ்மஹாலையும், வரலாற்றுப் பதிவுகளில் எந்தத் தடயமும் இல்லாமல் கடலில் மூழ்கிப்போன ஒரு கப்பலையும் பற்றிய ஒரு கதையைச் சொல்கிறது.

மூணாறின் அழகைப்போலவே இந்தக் கதையிலும் கதாநாயகி எலனோரா இசபெல் மேய் என்ற பிரிட்டிஷ் பெண்மணி தான். 19- ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூணாறில் தேயிலைத் தோட்டங்களைக் கண்காணிக்க வந்த ஹென்றி ஃபீல்ட்நைட் என்ற வெள்ளைக்காரரின் மனைவி அவள்.
திருமணத்திற்குப் பிறகு, தன் கணவனுடன் கப்பலில் மூணாறு வந்தடைந்த எலனோரா, சுற்றிலும் பரந்து விரிந்திருந்த பசுமையில் மேகத் துண்டைப் போலப் பறந்து திரிந்தாள். காதலின் உன்னத தருணத்தில், அவள் தன் கணவனிடம் சொன்னாளாம்: “நான் இறந்தால், என்னை இங்கேயே அடக்கம் செய்ய வேண்டும்!” அவளின் உள்ளத்தில் இருந்த காதல் மட்டுமல்ல, அவள் உடலில் குடிகொண்டிருந்த காலரா நோய்க்கிருமிகளும் அவளை அப்படிப் பேச வைத்துள்ளது. சில நாட்களிலேயே காலரா நோய் தாக்கி எலனோரா காலமானாள்.
அவளின் ஆசைப்படி, மலை உச்சியில் அவளை அடக்கம் செய்ய முற்பட்டபோதுதான் அங்கு ஒரு தேவாலயம் இல்லை என்ற உண்மை புரிந்தது. ஆனாலும் எலனோராவை அங்கேயே அடக்கம் செய்தனர். உலகின் எந்த இடத்திலும் தேவாலயம் கட்டப்பட்ட பின்னரே கல்லறை அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் இங்கு, ஒரு தேவாலயம் கட்டப்படக் காரணமாக அமைந்தது இந்தக் கல்லறைதான்.
தேவாலயம் இல்லாமல் எலனோராவின் கல்லறை மட்டும் அங்கு இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் அவ்வப்போது அங்கு வந்து மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பார்கள். பின்னர் 17 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இங்கு ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. எலனோராவின் கல்லறை, தேவாலயத்தின்
கல்லறைத் தோட்டதின் ஒரு பகுதியாக மாறியது. மூணாறின் “தாஜ்மகால்” என்று வர்ணிக்கப்படும் இந்தக் காதல் நினைவுச்சின்னம், பனி மூட்டத்தில் வெண் சிறகுகளை விரித்து நிற்கும் ஒரு காட்சியாகும். தற்போது சி.எஸ்.ஐ. தென் கேரளப் பேராயத்தின் கீழ் உள்ள இந்த தேவாலயமும் கல்லறையும் இங்கு வரும்
சுற்றுலாப் பயணிகளின் மனதில் இடம் பிடிக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.

இந்த தேவாலயம் கட்டப்பட்டதுதான் “கடல் விழுங்கிய கப்பல் கதை”
இனி கதையை கடலுக்குத் திருப்புவோம். 1910 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் தோட்ட உரிமையாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழிபட என சர்ச் ஒன்று இங்கே கட்டப்பட்டது. மூணாறு மலைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கற்களால் கட்டப்பட்ட அழகிய தேவாலயத்தின் வேலைகள் தொடங்கியபோதே, இங்கிலாந்திலிருந்து,
இங்குள்ள தேவாலயத்திற்கு தேவையான பொருட்கள், ஒரு பெரிய தேவாலய மணி, தேவாலயத்தில் பயன்படுத்த வேண்டிய மேசைகள், பெஞ்சுகள், பலிபீடம் மற்றும் பிற வழிபாட்டுப் பொருட்களுடன் ஒரு கப்பல் கொச்சி நோக்கிபுறப்பட்டது.
கப்பல் புறப்பட்ட செய்தி பிரிட்டிஷ்காரர்களால் தோட்ட உரிமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. மூணாறு மலைகளில் ஒலிக்கப் போகும் அந்தப் பெரிய தேவாலய மணி மற்றும் தளவாடங்களுக்காக அவர்கள் நாட்களை எண்ணிக் காத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த நேரத்தில் கப்பல் வராததால், பிரிட்டிஷ்காரர்களிடையே கவலை அதிகரித்தது.
அந்தக் காலத்தில் கப்பல் பயணங்கள் ஆபத்தானவை, வானிலை மாற்றம் எந்த நேரத்திலும் கப்பலை மூழ்கடிக்கலாம். அல்லது கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்த பிறகு கப்பலை மூழ்கடிக்கலாம். அல்லது தொழில்நுட்பக் கோளாறு வந்தாலும் கப்பல் குறித்த நேரத்திற்கு வந்து சேர முடியாது,
ஆம்… கடைசியில் அவர்கள் பயந்தபடியே நடந்தது. அந்தக் கப்பல் கரையை அடையவில்லை. அரபிக்கடலில் எங்கோ மூழ்கிப்போனது உறுதி செய்யப்பட்டது. தேவாலயத்திற்காக தயார் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட பொருட்கள், வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள், பித்தளை தகடுகள், பலிபீடம், வழிபாட்டுப் பொருட்கள் – அனைத்தும் கடலால் விழுங்கப்பட்டன. அதனுடன், மலைகளில் மணியோசையை எழுப்ப வேண்டிய அந்தப் பெரிய தேவாலய மணியும்…

ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் மனம் தளரவில்லை. அவர்கள் மீண்டும் இந்தப் பொருட்களை அங்கே தயார் செய்து மற்றொரு கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர். அது கொச்சி கடற்கரையை அடைந்தது. பொருட்கள் அனைத்தும் மூணாறு மலைகளுக்கு கொண்டு வரப்பட்டன. 1910 ஆம் ஆண்டிலேயே தேவாலயம் திறக்கப்பட்டது.
அங்கே இன்றும் பைபிள் கதாபாத்திரங்களையும், புனிதர்களையும் சித்தரிக்கும் வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள், பிரிட்டிஷ் பாணியில் செய்யப்பட்ட ரோஸ்வுட் தளவாடங்கள், முக்கிய பிரிட்டிஷ் தோட்ட உரிமையாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்லறைகள், ரோமன் கட்டிடக்கலை பாணியில் உயரமான கூரையோடு, ஒரு மணியுடன் கட்சியளிக்கிறது.
நூற்றாண்டுக்கும் மேலாகத் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு வரும் இந்தக் கப்பல் விபத்து கதைக்கு ஆதாரம் உள்ளதா? உள்ளது என்றும் இல்லை என்றும் வாதங்கள் உள்ளன. தேவாலயத்தின் பழைய கால (மினிட்ஸ் நோட்) குறிப்பு நோட்டுகளில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முந்தையகால பாதிரியார்கள் கூறியதாக விசுவாசிகள் சொல்கிறார்கள்.
ஆனால் சமீபத்திய சோதனைகளில் இவை எதுவும் இங்கு கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிகிறது. இருப்பினும், இந்தக் கதை இன்னும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, மலை உச்சியில் உள்ள ‘இசபெல்’ காதல் கதையைப் போல…
