
தமிழ்நாடு-கேரள எல்லை மலைச் சாலையில் எஸ்டேட் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் போட்டி போட்டு வேகம் கூட்டுவதால், விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தேனி மாவட்டத்தில் எழுந்துள்ளது.
இது குறித்து கம்பத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்நாதன் கூறுகையில்..,
”தமிழ்நாடு-கேரள எல்லையில் தமிழகத்தில் இருந்து கேர்ளாவுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எஸ்டேட் வேலைக்காக சென்று வருகிறார்கள். கம்பம் மெட்டு, குமுளி, போடிமெட்டு மலைச்சாலையில், நாள்தோறும் காலையும், மாலையும் ஜீப்புகளை காண முடியும்.
தேனி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ஏலம், மிளகு, காப்பி எஸ்டேட்டுகள் அதிகமாக உள்ளன இந்த தோட்டங்களில் வேலை செய்வதற்கு போதுமான வேலைஆட்கள் அங்கு இல்லை. அதற்கான சம்பளமும் அதிகம்
அதனால், தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர், போடி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஜீப்புகளில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் கூலித்தொழிலாளர்கள் கேரளப்பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு, வண்டன்மேடு, நெடுங்கண்டம், மாலி, கட்டப்பனை, பத்துமுறி, கடசிக்கடவு, ஜக்குபள்ளம், ஆனவிலாசம், புளியமலை, ஓடைமேடு போன்ற பகுதிகளிலுள்ள ஏலம், காபி, மிளகு தோட்டங்களுக்கு கூலிவேலைக்கு சென்று திரும்புகின்றனர்.
இப்பகுதிகளுக்குச் செல்ல தமிழக அரசு பஸ்கள் இருந்தாலும், தொழிலாளர்களை தோட்டத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அழைத்துச் சென்று திரும்ப கொண்டுவந்துவிட தோட்ட நிர்வாகத்தினர் ஒப்பந்த முறையில் வண்டிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இதில சில வாகனங்களில் நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கம்பம் மெட்டு, குமுளி, போடி மலைச்சாலைகளில் அசுர வேகத்தில் அணிவகுத்துச் செல்வதால் அவ்வப்போது விபத்துக்களும் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன.
மாலை நேரத்தில் நடைபயிற்சி செல்பவர்களும், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த பீதிக்குள்ளாகின்றனர்.
ஒரு வண்டியில் 8 முதல் 10 பேர் வரையில் மட்டுமே செல்ல அனுமதியிருந்தும், அறிவுறுத்தப்பட்டும், 15 முதல் 20 கூலித் தொழிலாளர்கள் வரை ஒரே வண்டியில் ஏற்றிச் செல்கின்றனர். கடந்த ஒருசில ஆண்டுகளில் மட்டும் ஜீப்புகளின் அதிவேக விபத்தால் 35 க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பிட்ட பயணிகளுக்கு மேல் ஏற்றி செல்வதால் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை கிடைக்காமல் போகிறது.
அதிக அளவில் கூலித் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களை சோதனைச்சாவடி போலீசாரும் கண்டு கொள்வதில்லை. அதிகாரிகள் விபத்து நடந்தபின் சோதனை மேற்கொள்வதை விடுத்து அளவுக்கு அதிகமான தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கம்பம்மெட்டு, குமுளி, போடிமெடடு மலைச்சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால் இனிவரும் நாட்களில் பல அப்பாவி கூலித்தொழிலாளர்களின் உயிர்கள் காப்பாற்றப்படும்” என்றார்.
இதுகுறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் விசாரித்தோம்.
“போக்குவரத்து துறை சார்பில் வாகன ஒட்டிகளுக்கு அவ்வப்போது கூட்டம் போட்டு அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும் அடிக்கடி வாகன சோதனை நடத்தப்படுகிறது. முறையாக ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. டிரைவர் வண்டியை அதிவேகமாக ஓட்டிச்சென்றால் வண்டியில் இருப்பவர்கள் அவருக்கு அறிவுரை சொல்ல வேண்டும். 10 நிமிடங்கள தாமதமாக வந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை. இதை டிரைவர்கள் உணரவேண்டும்” என்றனர்.
தொழிலாளர்களை காப்பாற்ற தமிழ்நாடு அரசு இந்த ரூட்டுகளில் அதிக பேருந்துகளை இயக்கலாம், அடிக்கடி பேருந்துகளை இயக்கலாம், இதன் மூலம் ஜீப்புகளின் ஆட்டத்தை அடக்க முடியும்.
